பட்டாஸ் திரைவிமர்சனம்!

15 January 2020 சினிமா
pattasreview.jpg

அசுரன் பட வெற்றிக்குப் பிறகு, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் பட்டாஸ். படத்தின் கதைக்கு நேராகச் செல்வோம்.

அடிமுறை என்ற தமிழ்நாட்டின் பாரம்பரிய தற்காப்புக் கலையினை, இப்படத்தில் மையப் புள்ளியாக வைத்திருக்கின்றார்கள் என்று பார்த்தால், அது படத்தின் ஒரு புள்ளி மட்டுமே. தந்தையைக் கொன்ற வில்லனை, மகன் பழிவாங்கினானா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

அப்பா மகன் கதாப்பாத்திரத்தில் நடிகர் தனுஷ். அப்பா திரவியப் பெருமான் கதாப்பாத்திரத்தில் நடிகர் தனுஷ் மிரட்டுகின்றார். தற்பொழுது தான், அசுரன் படத்தில் அதே மாதிரியானக் கெட்டப்பில் பார்த்ததால், நமக்கு அசுரனாகவே தனுஷ் தெரிகின்றார். வில்லனாக நவீன் சந்திரா. அவருக்கு அப்பாவாக, அடிமுறை கற்றுத் தரும் ஆசான் நாசர். நாசரைக் கொல்லும் வில்லன், தனுஷையும் கொல்கின்றான். பின்னர், தனுஷின் மனைவி சினேகாவையும் சிறைக்கு அனுப்புகின்றான். இதனை வளர்ந்த பின் அறியும் மகன் தனுஷ், எப்படி பிரச்சனையை தீர்க்கின்றார் என்பதை ரொம்ப மொக்கையாக கூறியிருக்கின்றார் இயக்குநர்.

படத்தின் முதல் பாதியில் சக்தி என்ற கதாப்பாத்திரத்தில், சிறிய சிறியத் திருட்டுக்களை செய்யும் தனுஷ். அவருடைய கூட்டாளியாக நடிகர் சதீஷ். பரவாயில்லை எனும் அளவிற்கு அவருடைய காமெடி உள்ளது. ஒரு கட்டத்தில், சிறையில் இருந்து வெளியில் வரும் சினேகா, சக்தியைப் பார்க்கின்றார். பார்ப்பதற்கு, அப்படியே தனது கணவரைப் போலவே இருப்பதால், இவர் தான் தன் மகன் என்பதை அடையாளம் கண்டு கொள்கின்றார். பின், சக்தியிடம் தான் யார், உன்னுடைய தந்தை யார் என்பதை விவரிக்கின்றார். இரண்டாவது பாதியில், வரும் சண்டைக் காட்சிகள், வில்லனைப் பழிவாங்க சக்தி செய்யும் செயல்கள் என படம் செல்கின்றது.

படத்தில் நாயகி இருக்க வேண்டும் என்பதற்காக, மகன் தனுஷிற்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சதா. ஆனால், அவருக்கு இப்படத்தில் பெரிய அளவில் இடமில்லை. எல்லாமே, சினேகாவிற்குத் தான். இந்தத் தீபாவளிக்கு பெரிய படங்கள் வரவில்லை என்பதால், இந்தப் படம் தப்பிக்கும். படத்தில் லாஜிக் பார்க்காமல், தனுஷை மட்டும் பார்க்க திரையறங்கு சென்றால், கண்டிப்பாக ரசிக்கலாம். படத்தின் பாடல்கள் சுமார் ரகம் தான். சில் ப்ரோ, ஜகிடி கில்லாடி என்ற பாடல்கள் ஹிட் என்றாலும், படத்திற்கும் இந்தப் பாடல்களுக்கும் சம்பந்தம் இல்லை.

பின்னணி இசையும் சுமார் ரகம் தான். தனுஷ் இருக்கும் லெவலுக்கு, அதற்கேற்றாற் போல இசையமைப்பாளரைப் பிடித்திருக்கலாம். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால், பட்டாசு வெடித்திருக்கும்.

ரேட்டிங் 2.4/5

HOT NEWS