ப சிதம்பரம் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 10 முதல் 15 நாட்கள், சிபிஐ விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று செய்தியாளர்களுக்கு சுமார் 4 நிமிடங்கள் பேட்டி அளித்த ப சிதம்பரம் பின்னர், தன்னுடைய டெல்லியில் உள்ள வீட்டிற்குச் சென்றார்.
பேட்டியின் பொழுது, என்னுடையப் பெயர் எப்ஐஆர்ரில் இல்லை எனவும், நான் அனைத்து வித ஒத்துழைப்பையும் அளித்துள்ளேன் எனவும் கூறினார். மேலும் அவர் பேசுகையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அனைத்துமே சட்டப்படி தான் நடைபெற்றுள்ளன எனவும், நான் ஓடி ஒளியவில்லை எனவும் கூறினார். மேல்முறையீட்டு மனுவினை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்தும், நாளை விசாரிக்கமாட்டேன் என உச்சநீதிமன்றம் கூறியது துரதிர்ஷ்டவசமானது என்று பேசிவிட்டு, விரைவாக வீட்டிற்கு விரைந்தார்.
அவர் வீட்டிற்கு வருவதை அறிந்த அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள், அவருடைய வீட்டிற்கு வேகமாக விரைந்தனர். ப சிதம்பரம் அவருடைய வீட்டிற்குச் சென்றதும், வீட்டின் கதவினை வேலையாட்கள் மூடிவிட்டனர். இதனால், சிபிஐ அதிகாரிகள் ஒரு சிலர் வீட்டின் சுவரை ஏறிக் குதித்து, உள்ளே சென்றனர். பின், அவர்கள், மூடிய கதவை மற்ற அதிகாரிகளுக்காக திறந்துவிட்டனர். இந்த விஷயத்தை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள், சிதம்பரத்தின் வீட்டின் முன் கூடி, தர்ணாவில் ஈடுபட்டனர்.
உலக அளவில் பெயர் பெற்ற அரசியல்வாதியான ப சிதம்பரம் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மருத்துவ சோதனை செய்யப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.
இந்த வழக்கிற்காக, மொத்தம் 23 முறை முன்ஜாமீன் பெற்றுள்ளார் ப சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.