தமன்னா நடித்த ஒரே காரணத்தால், படத்திற்குச் சென்று பலரும் பார்க்கின்றனர். உண்மையைக் கூற வேண்டும் என்றால், படத்தில் ஊறுகாய் அளவிற்குத் தான் தமன்னா இருக்கிறார் என்பதை, முதலிலேயே கூறுவதான் விமர்சனத்திற்கு அழகு.
படம் சாதாரணப் பேய் கதை தான். சங்கிலி புங்கிலி படம் பார்த்திருந்தீர்கள் என்றால், இது உங்களுக்குப் புதிய படம் இல்லை. ஜீவா நடிப்பில் வந்த அந்தத் திரைப்படத்தில், வீட்டில் பேய் இருப்பதாகக் கூறி, வீட்டினைக் குறைந்த விலைக்கு வாங்குவார். ஆனால், அங்கு உண்மையாகவே பேய் இருக்கும். அதனை அவர்கள் வென்றார்களா, இல்லையா என்பது தான் மீதிக் கதை.
அதை அப்படியே, ஒரு குறையும் இல்லாமல் படமாக எடுத்திருக்கிறார்கள். கதையில், அப்படி விற்க முயற்சிப்பதற்கான காரணங்கள் தான் வேறு. தெலுங்கில் வெளியாகி செம ஹிட்டான, ஆனந்தோ பிரம்மா படத்தின் ரீமேக் படம் தான் இந்த பெட்ரோமேக்ஸ்.
இந்தப் படத்தில், நடித்திருப்பவர்கள் பத்து ஒன்பது பேர் காமெடியன்கள். இருந்தாலும், அவர்கள் பேசிக் கொண்டே இருப்பது நமக்கு எரிச்சலைத் தருகின்றது. ஏன்டா படத்திற்கு வந்தோம் என, முதல் பாதியில் நினைத்தால், பரவாயில்லப்பா என, இரண்டாவது பாதி நினைக்க வைக்கின்றது.
படத்தில் முனீஷ் காந்த் மற்றும் சத்யன் காமெடியை விட, சரவணக்குமார் காமெடி நன்றாக உள்ளது. அவ்வப்போது பேயாக வந்து, தமன்னா நம்மை குதூகலப்படுத்துகின்றார். பேயா இவங்க என்று கேட்கும் அளவிற்கு மிக அழகாகவே காட்சித் தருகிறார். அதனால் தான் என்னவோ, இப்படத்தினை பேய் படமாக, பார்ப்பதற்கு மனம் வரவில்லை.