+2 பொதுத்தேர்வுகள் ஆரம்பம்! எட்டு லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்!

02 March 2020 அரசியல்
publicexam.jpg

தமிழகத்தின் +12 பொதுத் தேர்வுகள் இன்று (02-02-2020) முதல் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வில், சுமார் எட்டு லட்சத்து மூவாயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

மார்ச் இரண்டாம் தேதி தொடங்கி, மார்ச் 24ம் தேதி வரை இந்தப் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக, மாணவர்கள் கடந்த ஒரு வருடமாக தயாராகி வருகின்றனர். இந்தத் தேர்விற்காக, மூன்றாயிரம் தேர்வு மையங்கள் தயார் படுத்தப்பட்டு, பயன்படுத்தப்பட உள்ளன.

காலைப் பத்து மணிக்கு தொடங்கும் தேர்வானது, மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வில், முதல் பத்து நிமிடம் வினாத்தாளைப் பிரித்துப் படிக்கவும், பின்னர் அடுத்த ஐந்து நிமிடம் விடைத்தாளில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும், சரிபார்க்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே 14ம் தேதி அன்று வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துவிட்டது.

இந்தத் தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் தடுப்பதற்கு, நான்காயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனைகளும் நடத்தப்பட உள்ளன. முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது. இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பலத் தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.




HOT NEWS