1000 கோடி கேட்ட எடப்பாடி! 61 ரயில்களை இயக்க அனுமதி கோரினார்!

11 May 2020 அரசியல்
epsmeetsmodi.jpg

இன்று பிரதமருடன் நடைபெற்றக் கூட்டத்தில் 1000 கோடி ரூபாயினைக் கேட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்தியா முழுவதும் வருகின்ற மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது, நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, நாட்டின் நிலைமையை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

அவ்வப்போது, மாநில முதல்வர்களுடன் பாரதப் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகின்றார். இன்றும், நாட்டு மக்களின் நிலைக் குறித்தும், ஊரடங்கு குறித்தும் மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் உரையாற்றினார். அப்பொழுது, தமிழக முதல்வர் எடப்பாடியும் அதில் கலந்து கொண்டார்.

அவர் பிரதமருடன் பேசும் பொழுது, தமிழகத்தின் சென்னைப் பகுதியில் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது எனவும், அதனால், மருந்துப் பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க 1000 கோடி ரூபாய் வேண்டும் எனக் கேட்டுள்ளார். சென்னையில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால், வருகின்ற மே-31ம் தேதி வரை, சென்னைக்கு ரயில் சேவை மற்றும் விமான சேவையினை தொடங்க அனுமதிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு வழங்கப்படாமல் உள்ள ஜிஎஸ்டி வரிப் பணத்தினை, உடனடியாக வழங்க வேண்டும் எனவும், சிறுகுறுத் தொழில்களுக்கு அதிகளவில் கடன் உதவி வழங்க வேண்டும் எனவும், ரேஷன் அட்டைகளுக்கு வழங்கும் தானியங்களின் அளவினை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்காக 61 சிறப்பு ரயில்களை, அனைத்து மாநிலங்களுக்கும் இயக்க, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

HOT NEWS