நவம்பர் வரை இலவச ரேஷன் பொருட்கள்! பிரதமர் அறிவிப்பு!

30 June 2020 அரசியல்
modi7request.jpg

வருகின்ற நவம்பர் மாதம் வரை, இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக, பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று மாலை நான்கு மணியளவில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசுகையில், வருகின்ற நவம்பர் மாதம் வரை, இந்தியாவில் உள்ள அனைத்துக் குடும்ப ரேஷன் அட்டைகளுக்கும் இலவசமாக ஐந்து கிலோ அரிசி அல்லது ஐந்து கிலோ கோதுமை, ஒரு கிலோ சுண்டல் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து தீபாவளி, ஷட் பூஜை பண்டிகைத் தினங்கள் வரிசையாக வருவதால், அவைகளைக் கருத்தில் கொண்டு நவம்பர் வரை, ரேஷன் பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது 80 கோடி பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்காக 90,000 கோடி ரூபாய் செலவாகும் எனவும் கூறியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 20 கோடி ஏழைக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 31,000 கோடி ரூபாயானது வழங்கப்பட்டு உள்ளது. அதே போல், ஒன்பது கோடி விவசாயிகளுக்கு சுமார், 18,000 கோடி ரூபாயானது வழங்கப்பட்டு உள்ளது. உலகளவில் ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கும் கட்டுக்குள்ளேயே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், தகுந்த நேரத்தில் நாம் ஊரடங்கினை அறிவித்தது தான்.

ஊரடங்கின் பொழுது இருந்த எச்சரிக்கை தற்பொழுது இல்லை. அன்லாக் ஒன்று அறிவித்த நிலையில், சமூக இடைவெளியினைப் பின்பற்றுவதும், முகக் கவசம் பயன்படுத்துவதும் குறைந்துள்ளது கவலை அளிக்கின்றது. கட்டாயம், அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும். அதே போல், வெளியில் செல்லும் பொழுது முகக் கவசம் அணிய வேண்டும்.

இன்று நம்மால், ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவுப் பொருட்களை வழங்க முடிகின்றது என்றால், அதற்கு முக்கியக் காரணம் இருவர் தான். ஒன்று நம் நாட்டின் விவசாயிகள் மற்றொருவர், நேர்மையாக நாட்டிற்கு வரி கட்டும் மக்கள் தான். இந்த இரண்டு தரப்பிற்கும், என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS