லடாக் எல்லையில் மோடி! இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை!

03 July 2020 அரசியல்
modiinladakh.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் பகுதியில் மோதல் ஏற்பட்ட நிலையில், தற்பொழுது அப்பகுதியில் யாரும் எதிர்பாராத விதமாக பிரதமர் மோடி ஆய்வு நடத்தி வருகின்றார்.

கடந்த ஜூன் 15ம் தேதி அன்று, இந்தியாவின் இராணுவ வீரர்கள் 20 பேர், சீன இராணுவத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம், இரு நாடுகளுக்கு இடையிலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது இந்த சூழ்நிலையில், லடாக் பகுதி தங்களுக்கே சொந்தம் எனக் கூறும் சீனா, அத்துமீறல்களைத் தொடர்ந்து செய்து வருகின்றது.

மேலும், தங்களுடைய இராணுவத் துருப்புகளை அப்பகுதியில் நிலை நிறுத்தி வருகின்றது. அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவின் சார்பிலும், இராணுவ வீரர்கள், பீஷ்மா டாங்கிகள் உட்படப் பல பாதுகாப்பு விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதாக இருந்தது.

இந்த சூழ்நிலையில், இன்று யாரும் எதிர்பாராத விதமாக, பாரதப் பிரதமர் மோடி பதற்றம் நிறைந்த லடாக் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள இராணுவ வீரர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். அவருடன் முப்படைத் தளபதி, பிபின் ராவத்தும் உடன் சென்றுள்ளார். இச்சம்பவம், இந்திய சீனப் பிரச்சனையில் பரபரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

அங்குள்ள இராணுவ வீரர்களுடன் உரையாடிய மோடி, தாய் நாட்டைக் காக்க எவ்வித தியாகத்தினையும் செய்ய தயார் என்றுக் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், இந்திய வீரர்கள் வெளிக்காட்டும் வீரமும், தீரமும் உலக நாடுகளுக்கு இந்தியாவின் பலம் என்னவென்று உணர்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார். நாடுகளைக் கைப்பற்றும் காலம் மலையேறிச் சென்றுவிட்டதாகவும், லடாக் நம் நாட்டிற்கு சொந்தமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய மோடி, பின்னர் லடாக் மற்றும் லே பகுதிகளில் ஆய்வினை முடித்துக் கொண்டு, தனி ஹெலிகாப்டர் மூலம் டெல்லி புறப்பட்டார்.

HOT NEWS