மாஸ்க்குகள் சானிட்டைஸர்கள் தயாரிக்கும் போலீஸ்! குவியும் பாராட்டுக்கள்!

03 April 2020 அரசியல்
policemakingmask.jpg

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் தேவையில்லாமல் நடமாடக் கூடாது எனவும் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பலப் பகுதிகளில் இந்த வைரஸானது கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகின்றது. இதுவரையிலும், 235 பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், மதுரையைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்து உள்ளார். பொதுமக்களை வெளியில் நடமாட விடாமல் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டில் இருக்கும் பொதுமக்கள், வெளியில் கடைகளுக்கு வரும் பொழுது முகக் கவசம் அணிந்தும், கைகளை சானிட்டைசர்ஸ் கொண்டு கழுவியும் வருகின்றனர். இதனால், முகக் கவசத்திற்கும், சானிட்டைசர்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. உள்நாட்டிலேயேத் தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இதனிடையே, சென்னை ஆயுதப்படைப் பிரிவு போலீசார் தற்பொழுது முகக்கவசம் மற்றும் சானிட்டைசர்களைத் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தையல் இயந்திரங்களைக் கொண்டு முகக் கவசம் தயாரித்து வருகின்றனர். இதற்காக ஒரு லட்சம் மதிப்பிலான, மூலப் பொருட்களை வாங்கியுள்ளனர்.

இதன் மூலம், 60,000 மாஸ்க்குகளைத் தயாரிக்க இயலும் எனவும் கூறுகின்றனர். அதே போல், மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, வேதியியல் படித்த காவலர்கள், சானிட்டைசர்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார், 1000 லிட்டர் சானிட்டைசர்களை உருவாக்கி வருகின்றனர். இதனை, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, ஒரு நாளைக்கு சுமார், 100 எம்எல் சானிட்டைசரைப் போலீசாருக்கு வழங்க இயலும் எனக் கூறுகின்றனர்.

காவலர்களின் இந்த முயற்சிக்கு, பொதுமக்கள் தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்து வருகன்றனர். காவலர்கள் தற்பொழுது தங்களுக்குத் தேவையான முகமூடிகளையும், சானிட்டைசர்களையும் தயாரிப்பதால், செலவுகள் மிகக் குறையும். ஒரு மாஸ்க்கானது, வெறும் 1.50 ரூபாய் அளவிலேயே செலவாகின்றது எனவும் தயாரிக்கும் காவலர்கள் கூறுகின்றனர்.

HOT NEWS