கோட்சே ஒரு தேச பக்தர்! பிரக்யா தாக்கூர் மீண்டும் சர்ச்சை பேச்சு!

29 November 2019 அரசியல்
pragyasinghthakur.jpg

கடந்த புதன் கிழமை அன்று, நடைபெற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், திமுக எம்பியான திரு. ஆ. ராசா பேசுகையில், நாதுராம் கோட்சேவின் சித்தாந்தத்தின் காரணமாக, மகாத்மா காந்தியைக் கொல்வதற்கு முடிவெடுத்தார் எனக் கூறினார்.

அப்பொழுது, உடனே குறுக்கிட்டுப் பேசிய பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர், தேச பக்தரை நீங்கள் உதாரணமாகக் கூறக் கூடாது எனத் தெரிவித்தார். பின்னர், அதற்கு நேற்று விளக்கமளித்து பிரக்யா சிங், நான் உதாம் சிங்கினைப் பற்றித் தான் பேசினேன் எனவும், கோட்சேவினைப் பற்றி அல்ல எனவும் தெரிவித்தார்.

இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு தீவிரவாதியை தேச பக்தர் என, மற்றொரு தீவிரவாதி கூறுகின்றார் என, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி, தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். பிரக்யாவின் கருத்திற்கு பாஜகவினரும், கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்பொழுது அவரை மத்திய மக்களவை பாதுகாப்பு விவரங்களுக்கான ஆலோசனை குழுவிலிருந்து நீக்குவதாக, ராஜ்நாத்சிங் தெரிவித்தார். மேலும், அவர் இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் பாஜகவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, கோட்சே ஒரு தேச பக்தர் என்ற பேச்சுக்கு, பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். இது போன்று, இனிமேல் யாரும் பேசக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அதனையும் மீறி, தற்பொழுது பிரக்யா சிங் தாக்கூர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

HOT NEWS