மஹாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது!

13 November 2019 அரசியல்
ramnathgovind.jpg

மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிந்து பல வாரங்கள் ஆகிவிட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தும் கிட்டத்தட்ட 20 நாட்களை எட்ட உள்ள நிலையில், யாராலும் ஆட்சியமைக்க முடியாதக் காரணத்தால், தற்பொழுது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

மஹாராஷ்டிராவில் நடைபெற்றத் தேர்தலில், பாஜக அதிக இடங்களில் வென்றாலும், ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள் அக்கட்சியிடம் இல்லை. இதனால், அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனாவினை நம்பியிருந்தது. ஆனால், முதலமைச்சர் பதவி உட்பட அனைத்துப் பதவிகளிலும், 50 சதவீத பங்கினை சிவசேனா கேட்டது. அதற்கு பாஜக மறுத்ததால், பாஜகவிற்கு சிவசேனா ஆதரவு வழங்கவில்லை.

மேலும், சிவசேனா தனியாக ஆட்சியமைக்க முடிவு செய்தது. இந்நிலையில், பாஜகவினை ஆளுநர் பகத் சிங் கோசியாரி ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால், அக்கட்சியால் ஆட்சியமைக்க முடியவில்லை. பின்னர், சிவசேனாவின அழைத்தார். அவர்கள் தங்களுக்கு 48 மணி நேர அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்களுக்கு 24 மணி நேரம் மட்டுமே இருந்ததால், அவர்களைத் தொடர்ந்து, சரத் பவாருக்கு அழைப்பு விடுத்தார். யாரும் ஆட்சியமைக்க முன்வராததால், நிலைமையை கடிதமாக எழுதி, மஹாராஷ்டிரா ஆளுநர் திரு. கோசியாரி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

இதனிடையே, மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் ஆட்சியமைக்க ஒப்புதல் அளித்தார். இதனால், மஹாராஷ்டிராவில் தற்பொழுது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

இதனை எதிர்த்து, சிவசேனா கட்சியினர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளனர். பாஜகவிற்கு 48 மணி நேரம் அவகாசம் அளித்த ஆளுநர், ஏன் எங்களுக்கு வெறும் 24 மணி நேரம் மட்டும் வழங்கினார் எனக் கேள்வி எழுப்பியும் உள்ளனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர், திரு. சரத் பவார் மற்றொருத் தேர்தலை சந்திக்க, எங்கள் கட்சிக்கு விருப்பமில்லை எனவும் தெரிவித்தார்.

HOT NEWS