இனி தனியார் நிறுவனங்களே, தாங்கள் இயக்கும் ரயில்களின் நிறுத்தங்கள் மற்றும் டிக்கெட்டின் விலையினை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்பொழுது, தனியார் ரயில்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 109 வழித்தடங்களில் 150 ரயில்களுக்கு, அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தனியார் ரயில் சேவையானது, வருகின்ற 2023ம் ஆண்டு தொடங்க உள்ளது. இதற்காகப் பல தனியார்கள் நிறுவனங்கள் முன்வந்து உள்ளன.
பாம்பாடியார், சீமென்ஸ், ஆல்ஸ்டாம் உள்ளிட்ட 23 தனியார் நிறுவனங்கள் தற்பொழுது இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களின் லாபத்தினைக் கருதியும், தரமான சேவையினைக் கருதியும் மத்திய அரசு தற்பொழுது புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தனியார் ரயில்கள் தாங்கள் செல்லும் வழித்தடத்தில் எங்கு நிற்க வேண்டும் என, அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும், மேலும், டிக்கெட் விலையினையும் முடிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தாங்கள் நிற்கப்போகின்ற நிறுத்தங்கள் குறித்தும், டிக்கெட் விலைக் குறித்தும் ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது. அதே போல், தனியார் ரயில்கள் குறித்த நேரத்திற்கு முன்பாக வந்து நின்றாலும், தாமதமாக வந்து நின்றாலும், பயணிகளுக்கு நஷ்ட ஈட்டினை கண்டிப்பாக வழங்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் தற்பொழுது அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.