இந்தியா வந்தது ரபேல்! விமானப் படையில் இணைக்கப்பட்டது!

29 July 2020 அரசியல்
rafaleindia.jpg

நீண்ட நாட்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரபேல் விமானமானது, இன்று இந்தியாவிற்கு வந்தது.

கடந்த 27ம் தேதி அன்று, பிரான்ஸ் நாட்டில் இருந்து கிளம்பிய ரபேல் போர் விமானம், அமீரகத்தின் விமான தளத்தில் நேற்று தரையிறங்கியது. சுமார் 7000 கிலோ மீட்டர் தொலைவு உள்ள காரணத்தால், அங்கு நிறுத்தப்பட்டு விமானிகள் ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து இன்றுக் காலையில் கிளம்பிய ரபேல், சரியாக 12 மணியளவில் இந்தியாவின் வான்வளி எல்லைக்குள் நுழைந்தது.

அதனுடன் இந்தியாவின் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க் கப்பலானது, தொடர்பினை ஏற்படுத்தியது. பின்னர், அந்த ஐந்து ரபேல் போர்விமானங்களும் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் அம்பாலா பகுதியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள விமான தளத்தில் தரையிறக்கப்பட்டன. இந்த விமானம், பறந்து வரும் வழியில் நேற்று வானத்திலேயே எரிபொருளை தன்னுடைய விமானத்தில் ஏற்றிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த இந்த விமானங்களை, இந்தியாவின் சுகோய் 30 போர் விமானங்கள் இரண்டு பறந்து சென்று, வரவேற்று அழைத்து வந்தது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இது இந்தியாவின் இராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் என்றுக் கூறியுள்ளார்.

இந்த விமானத்தினை இந்தியாவின் விமானப்படை தளபதி, முறைப்படி விமானதளத்திற்குச் சென்று வரவேற்றார். மேலும், இது குறித்து பாரதப் பிரதமர் மோடி ரபேல் விமானத்திற்கு வரவேற்பு அளித்தும், பாராட்டியும் கருத்து தெரிவித்துள்ளார். மொத்தம் 36 ரபேல் விமானங்கள் வாங்க, இந்தியா சார்பில் பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில், அவசரமாக தற்பொழுது 5 விமானங்கள் இந்தியாவிற்காக வாங்கப்பட்டு உள்ளன.

HOT NEWS