பி வாசு இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில், 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. தெலுங்கில் வெளியான, ஆப்தமித்ரா படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட்டது.
சுமார் 2 ஆண்டுகள் ஓடிய இந்தத் திரைப்படம், ரஜினிகாந்தின் திரைப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. இதற்கு அடுத்து, அதைப் போல் பலப் பேய் படங்கள் வந்தாலும், சந்திரமுகி அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை. இந்தப் படத்தில், பேயாக நடித்த ஜோதிகாவின் நடிப்பு, பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தினைத் தயாரிக்கும் பணியில், பி வாசு ஈடுபட்டு உள்ளார்.
இதற்காக அவர், ரஜினியிடம் கதை கூறியிருக்கின்றார். ஆனால், இந்தப் படத்தினை ரஜினிகாந்த் மறுத்துவிட்டாராம். இதனால், இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்குப் பதிலாக, ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளாராம். மேலும், இந்தப் படத்தினை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில், நடிக்க உள்ள வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றியத் தேர்வு நடைபெற்று வருவதாகவும், கோலிவுட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.