அக்னி நட்சத்திரம் முடிவு! அடித்து கொட்டும் மழை! மக்கள் மகிழ்ச்சி!

29 May 2020 அரசியல்
rainhome.jpg

நேற்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவிற்கு வந்த நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

தமிழகம் முழுவதும் இந்தக் கோடைக் காலத்தில் கடுமையான வெயிலினை பொதுமக்கள் எதிர்கொண்டனர். பெரும்பாலான மாவட்டங்களில் 35 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பம் பதிவானது. இதனால், பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், அனல் தாங்க முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த அக்னி நட்சத்திர சமயத்தில், வங்கக் கடலில் குறைந்த அழுத்த காற்று மண்டலத்தால், புயல் உருவானது. அம்பன் எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயலானது, மேற்கு வங்கத்தினை ஒரு ஆட்டு ஆட்டி விட்டது. அங்கு இந்தப் புயலால் 70க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக, மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி அறிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவிற்கு வந்தது. நேற்று மதியத்திற்கு மேல், தமிழகத்தின் பலப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, அனல்காற்று வீசிவந்த நிலையில், நேற்று குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை நான்கு மணியளவில் இருந்து, இரவு எட்டு மணி வரையிலும், தமிழகத்த்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. மதுரையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HOT NEWS