ராஜாவுக்கு செக் திரைவிமர்சனம்!

26 January 2020 சினிமா
rajavukkucheck.jpg

நீண்ட காலத்திற்குப் பிறகு, சேரன் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம். இந்தப் படத்தில் ஒரு பெண்ணிற்கு தந்தையாகவும், போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கின்றார் சேரப்பா எனும் சேரன்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, மீண்டும் லைம் லைட்டிற்கு வந்த சேரன், இந்தப் படத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றார் என்பதை முதலிலேயே கூறி விட வேண்டி உள்ளது. பெரும்பாலும், எதார்த்தமான கதாப்பாத்திரங்களில் தான் அவர் நடிப்பார். ஆனால், அதில் அவர் ஓவராக நடிப்பார். மாயக் கண்ணாடி உள்ளிட்ட படங்கள் ஒரு உதாரணம். ஆனால், இந்த ராஜாவுக்கு செக் படம் அப்படி இல்லை. பார்த்தால் புரியும்.

படத்தில் திடீரென்று வரும் தூங்கும் வியாதியால், மனைவியுடன் பிரிந்து வாழ்கின்றார் சேரன். தன் மகளை அழைத்துக் கொண்டு சென்று விடுகின்றார் சேரனின் மனைவியாக நடித்திருக்கும் சரயு மோகன். இந்த ஜோடிக்கு மகளாக நடித்திருக்கின்றார் நந்தனா வர்மா. படத்தின் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் கச்சிதமாக அமைந்திருப்பது படத்தின் மிகப் பெரிய பலம் ஆகும்.

வெளிநாட்டிற்கு செல்ல இருக்கும் மகளுடன், ஒரு பத்து நாளாவது ஒன்றாக வாழ வேண்டும் என நினைக்கும் சேரன், நீதிமன்றத்தின் மூலம் அதற்கு அனுமதியும் பெறுகின்றார். அப்படி ஒரு நாள் இருக்கும் பொழுது, திடீரென்று சேரனின் மகள் கடத்தப்படுகின்றார். அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்தாரா, வில்லன்களை எப்படி பழிவாங்கினார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் கதை பழமையாக இருந்தாலும், படத்தின் திரைக்கதை நன்றாக உள்ளது. மிக மெதுவாக ஆரம்பித்து, கடைசியில் டாப் கியரில் சென்று முடிவடைகின்றது. காதல் என்றப் பெயரில், பெண்களை ஏமாற்றுபவர்களைப் பற்றிய படம் என்பதால், தற்பொழுதுள்ள சூழ்நிலையில் கண்டிப்பாக நல்ல வரவேற்பினைப் பெறும்.

படத்தின் பாடல்கள் மொக்கை என்று கூறலாம். படத்தின் பாடல்களில் கவனம் செலுத்தி இருந்தால், இந்தப் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கும். படத்தின் பின்னணி இசை பொருத்தமாக உள்ளது. மேலும், ஒளிப்பதிவாளர் தான் இந்தப் படத்தின் இரண்டாவது நாயகன். அந்த அளவிற்கு சிறப்பாக தன்னுடைய உழைப்பினை கொடுத்து இருக்கின்றார்.

ராஜாவுக்கு செக்-ஜஸ்ட் மிஸ்

ரேட்டிங் 2.4

HOT NEWS