ரஜினி மக்கள் மன்றத்தில் இருப்பவர்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் என, ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்து உள்ளது.
கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று கட்சி ஆரம்பிக்க உள்ளதாக, டிசம்பர் 9ம் தேதி அன்று ரஜினிகாந்த், பின்னர் உடல்நலமில்லாதக் காரணத்தால் டிசம்பர் 29ம் தேதி அன்று பரபரப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், தன்னுடைய உடல்நலத்தினைக் கருத்தில் கொண்டு, அரசியலுக்கு வரமாட்டேன் எனத் தெரிவித்து உள்ளார். இதனால், ரஜினியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவருடைய புகைப்படங்களை எரித்து, போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ஜனவரி 17ம் தேதி அன்று ரஜினி மக்கள் மன்ற தலைமையிடம் தெரிவித்து விட்டு, அம்மன்றத்தின் நான்கு மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில், தற்பொழுது ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் புதிய அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது .அதன்படி, ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சிகளில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.
அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்திருந்தாலும், அவர்கள் எப்பொழுதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள் தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக் கூடாது என அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.