நேற்று மாலை, துக்ளக் பத்திரிக்கையின், 50வது ஆண்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நான் பேசுவேன் என குருமூர்த்தி சொல்லிவிட்டார். ஆனால், பேசுவதற்கு சுதந்திரம் இல்லை. எனக்கு ஒரு நேரம் வரும். அப்போது பேசுவேன். அவரை வைத்துக்கொண்டு என்ன பேச முடியுமோ அதை இப்போது பேசுகிறேன்.
சோவின் கடைசி ஆறு - ஏழு ஆண்டுகளுக்கு முன்பே, தனக்குப் பின் யார் இந்த துக்ளக் இதழை நடத்துவார்கள் என்ற கவலை வந்துவிட்டது. அவருக்கு வேறு சாய்ஸே இல்லை. ஒரே ஒரு சாய்ஸ், குருமூர்த்தி தான். ஆனால், குருமூர்த்தி அதை ஏற்கவில்லை. என்னிடம்கூட சோ சொன்னார், குருமூர்த்தியிடம் பேசும்படி. 'நீங்கள் சொல்லியே கேட்கவில்லை. நான் சொல்லியா கேட்கப்போகிறார்' என்றேன்.
எம்.ஜி.ஆர். படங்களை எடுத்துக் கொண்டால், அவரைத் தவிர, வேறு யார் நடித்தாலும் ஓடாது. அதுபோல, சோ இல்லாமல் துக்ளக் இரண்டு வாரம்கூட ஓடாது. துக்ளக் என்றால் சோ, சோ என்றால் துக்ளக்.
ஆனால், குருமூர்த்திக்கு பெரிய மனது. கையில் எடுத்தார். மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. துக்ளக்கின் ஒரிஜினாலிட்டி கொஞ்சமும் குறையாமல், இன்னும் வேகமாக, வீரியமாக நடத்திக்கொண்டிருக்கிறார். சோ ஒரு ஜீனியஸ். ஜீனியஸ்கள் படித்து உருவாவதில்லை. அவர்கள் உருவாகியே, பிறப்பார்கள். அவர்களை ஜீனியஸ் என அடையாளம் காண சில ஆண்டுகளாகும். அதற்கு ஒரு துறையை அவர்கள் தேர்வுசெய்வார்கள். அந்தத் துறையில் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவார்கள். ஜனங்கள் அவர்களை அடையாளம் காண்பார்கள். அப்படி ஒரு ஜீனியஸ்தான் சோ. அவர் தேர்வு செய்த துறை பத்திரிகை துறை. ஆயுதம் துக்ளக்.
அவர் ஒரு பெரிய பட்டாளத்தையே உருவாக்கினார். முரசொலியை வைத்திருந்தால் தி.மு.ககாரன் என சொல்லிவிடலாம். துக்ளக்கை வைத்திருந்தால் அவர் அறிவாளின்னு சொல்லிறலாம். துக்ளக் வைத்திருந்ததால அறிவாளியா, படிச்சு அறிவாளியானாரா - அது தெரியாது.
சோவை பெரிய ஆளாக்கியது இரண்டு பேர். ஒருவர் பக்தவத்சலம், மற்றொருவர் கலைஞர். பக்தவத்சலத்தின் அரசு இருந்தபோது, சோ நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார். பெரிதாக பிரபலமாகவில்லை. அப்போது 'சம்பவாமி யுகே.. யுகே' என ஒரு நாடகம். பக்தவசலத்தின் அரசை கடுமையாக விமர்சித்து அந்த நாடகம் இருந்தது. அந்த நாடகத்தை நிறுத்த வேண்டுமென வழக்கு போட்டார்கள். அதை எதிர்த்து சோ ஜெயித்தார். அதனால், நாடக உலகில் பிரபலமானார்கள்.
1971ல் சேலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.
இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். 'பிளாக்'கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார்.
அடுத்த இதழிலேயே நம்முடைய 'பப்ளிசிடி மேனேஜர்' என சோ அட்டையிலேயே வெளியிட்டார். இன்னொரு சம்பவத்தின் மூலம் தமிழகத்தில் மட்டும் அறிமுகமாகியிருந்த சோவை, இந்தியா முழுக்க பிரபலமானார். நெருக்கடி நிலை வந்தது. அப்போது அட்டையில் கறுப்பு அட்டையை வெளியிட்டார். நெருக்கடி நிலைக்கு எதிராக மாநிலம் மாநிலமாக பிரச்சாரம் செய்தார். பெரிய தேசிய தலைவர்களுடன் பழகினார். இந்தியா முழுவதும் தெரியவந்தார் தான் சோ. இப்போது சோ போன்ற ஒரு பத்திரிகையாளர் மிக அவசியம். காலம் ரொம்ப கெட்டுப்போய் விட்டது. சமுதாயம் கெட்டுப் போய்விட்டது.
ஊடகங்கள் தான், நம் நாட்டைக் காப்பாற்ற முடியும். அவர்களுக்கு பெரிய கடமை இருக்கிறது. சில ஊடகங்கள், டெலிவிஷன் சேனல்கள், எது நல்லதோ, எது உண்மையோ அதை வெளிப்படையாக மக்களிடம் சொல்ல வேண்டும். நியூஸ்ங்கிறது ஒரு பால். அதில் பொய்யிங்கிற தண்ணிய கலந்துருவாங்க. அப்பாவி ஜனங்களுக்கு அது தெரியாது. எது பால், எது தண்ணின்னு நீங்கதான் சொல்லனும் என்று பேசியுள்ளார்.