நேற்று மாலை, சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக ஆரம்பித்தது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு, ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்லி விருது வழங்கப்பட்டது.
கோவாவில் எட்டு நாட்கள் நடக்க உள்ள, 50வது சர்வதேச திரைப்பட விழா நேற்று மாலையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதில், இந்திய சினிமாப் பிரபலங்கள் மட்டுமின்றி, உலக சினிமாப் பிரபலங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். பாலிவுட் பிக் பீ என அன்புடன் அழைக்கப்படும், அமிதாப்பச்சன் இதில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் ஏற்கனவே அறிவித்தபடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு, ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்லி விருது வழங்கப்பட்டது. விருதிற்கான சான்றிதழை, ரஜினிகாந்திற்கு அமிதாப் பச்சன் வழங்கினார். கேடயத்தினை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழங்கி கௌரவித்தார்.
இதன் பின்னர் பேசிய அமிதாப்பச்சன், தன்னுடைய நண்பர் ரஜினிகாந்திற்கு இந்த விருது கிடைத்ததில் மிகப் பெரிய மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். ஒரு சில சமயங்களில், ரஜினிகாந்த் எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி உள்ளதையும் நினைவு கூர்ந்தார். இதன் பின்னர் பேசிய ரஜினிகாந்த், என்னுடன் பணிபுரிந்த இயக்குநர்கள், திரைப்பட ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி, மற்றும் இந்த விருதினை பெறக் காரணமாயிருந்த என்னை வாழ வைக்கும் நெஞ்சங்களான தமிழ் மக்களுக்கு நன்றி எனக் கூறினார்.