வருமானமே இல்லை! சொத்து வரி விதிக்கப்பட்டு உள்ளது! ரஜினிகாந்த் வழக்கு!

14 October 2020 சினிமா
rajinipressmeet.jpg

என்னுடைய ராகவேந்திரா மண்டபத்திற்கு வருமானமே இல்லை எனவும், ஆனால் அதற்கு சொத்து வரி விதிக்கப்பட்டு உள்ளதாக, ரஜினிகாந்த் வழக்குத் தொடர்ந்து உள்ளார்.

சென்னையில் உள்ள மிகப் பெரிய திருமண மண்டபங்களுள் ஒன்றாக, ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தில் திருமணம் செய்வதற்காகவே, பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு முன்பதிவு செய்வர். தற்பொழுது ஊரடங்கு சமயம் என்பதால், அந்த மண்டபம் வெறிச்சோடி போய் உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அந்த மண்டபத்தில் எவ்வித திருமணமும் நடைபெறவில்லை.

அரசாங்க உத்தரவினை அடுத்து, பெரிய அளவில் கூட்டம் கூடக் கூடாது என்பதால், அந்த மண்டபத்தினை யாரும் புக் செய்யவில்லை. இதனால், அந்த மண்டபம் காலியாகவே உள்ளது. இந்த சூழ்நிலையில், ராகவேந்திரா மண்டபத்திற்கு 6.50 லட்ச ரூபாயினை சொத்து வரியாக மாநகராட்சி நிர்வாகம் விதித்து உள்ளது. இதற்கு தற்பொழுது ரஜினிகாந்த் தரப்பில், கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வருமானமே இல்லாத சமயத்தில், இவ்வாறு சொத்து வரி விதிப்பது ஏன் எனவும் கேள்வி கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் தரப்பு, தற்பொழுது நீதிமன்றத்தினை அணுகி உள்ளது. ரஜினிகாந்த் தரப்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஆறு மாதமாக அந்த மண்டபம், காலியாகவே உள்ளது. வாடகைக்கு விடப்படவே இல்லை. இந்த நிலையில், இவ்வளவு பெரியத் தொகையினை வரியாக விதித்து உள்ளனர். எனவே, அந்தத் தொகையினை ரத்து செய்ய வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவிய சமயத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, பலரும் தங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களைப் பயன்படுத்திக் கொள்ள, அரசுக்கு அனுமதி வழங்கினர். அப்பொழுது, தன்னுடைய ராகவேந்திரா மண்டபத்தினையும் பயன்படுத்திக் கொள்ள, சென்னை மாநகராட்சிக்கு அனுமதி வழங்குவதாக, ரஜினிகாந்த் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், நீதிபதி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தன்னுடைய மனுவினைத் திரும்பப் பெறுவதாக, ரஜினிகாந்த் தரப்பு தெரிவித்து உள்ளது.

HOT NEWS