தற்பொழுது தமிழக அரசியல் சூடு பிடித்துள்ள நிலையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதிகள் பற்றியத் தகவல்கள் கசிந்து வருகின்றன.
தமிழகத்தில் வருகின்ற 2021ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கானத் தேர்தலானது நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் போட்டியிட்டாலும், அதற்குப் போட்டியாகப் பலப் புதியக் கட்சிகளும் களமிறங்குகின்றன. சீமான் தலமையில் நாம் தமிழர் கட்சியும், கமல்ஹாசன் தலைமையில் மக்கள்நீதி மய்யம் கட்சியும், எல்முருகன் தலைமையில் பாஜகவும் இறங்குகின்றன. அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் தான் உள்ளன என, அதிமுக கூறினாலும், இன்னும் பாஜக கூறவே இல்லை.
இதுவே தற்பொழுது சந்தேகத்தினை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தற்பொழுது கட்சி ஆரம்பிக்க உள்ளதை அறிவித்து உள்ளார். வருகின்ற ஜனவரி 1ம் தேதி கட்சிக் குறித்து முடிவுகள் வெளியாகும் எனவும், டிசம்பர் 31ம் தேதி அன்று இது குறித்து அறிவிப்பினை வெளியிடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் இதற்காக, தன்னுடைய கட்சியில் புதிதாக அர்ஜூன மூர்த்தி என்பவரையும், தமிழ் மணியன் என்பவரையும் இணைத்துள்ளார்.
இந்த சூழலில், ரஜனிகாந்த் கட்சி ஆரம்பித்து விட்டால், கட்டாயம் பாஜக அவருடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்து உள்ளார். அவர் எங்கு போட்டியிடுவார் எனப் பலரும் ஆலோசனை செய்து வருகின்றனர். அதில், சென்னை மயிலாப்பூரில் போட்டியிடுவார் எனவும், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன எனவும், அவர் பிறந்த ஊரான பரமக் குடியில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தான் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் தொகுதியில் தற்பொழுது தமிழக எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் வெற்றி பெற்று பதவியில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் கட்சி ஆரம்பிக்க உள்ள ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் போட்டியிடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என, அவருடைய அண்ணன் சத்யநாராயணன் திருவண்ணாமலையில் உள்ள அருணகிரிநாதர் கோயிலில் சிறப்பு யாகங்களைச் செய்துள்ளார். டிசம்பர் 12ம் தேதி அன்று ரஜினியின் பிறந்தநாள் வர உள்ளதால், அவர் உடல்நலமுடன் வாழ வேண்டி, சத்யநாராயணன், தன்னுடைய மகன் ராமகிருஷ்ணன் மற்றும் மருமகள் கீதாபாய் உடன் மிருத்யுஞ்செ யாகம் செய்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ரஜினி மன்றத்தில் நன்றாக உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கும்.
திராவிடக் கட்சிகளுக்கு கடைசி காலம் நெருங்கி விட்டது. யாரும் அவர்களை நம்பவில்லை. பகவான் விரும்பினால், ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் போட்டியிடுவார் எனவும் கூறியுள்ளார். இதனால், ரஜினிகாந்த் போட்டியிடும் தொகுதி பற்றித் தற்பொழுது சூசகமாகப் பேசப்பட்டு வருகின்றது. இதனை ரஜினிகாந்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.