ராமர் கோயில் பூமி பூஜை எப்போது? பத்திரிக்கை வெளியானது!

04 August 2020 அரசியல்
ramartemple.jpg

நாளை அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜைக்கான பத்திரிக்கை, அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த பரபரப்புத் தீர்ப்பினைத் தொடர்ந்து, மத்திய அரசு உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலினைக் கட்டுவதற்கான அறக்கட்டளையை நிர்மானித்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது அந்தக் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவானது ஆகஸ்ட் 5ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

இந்த நாளில், பாரதப் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகின்றார். காலை 12.15 மணியளவில் இந்த நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது. இதில் பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதால், இதற்காக பாதுகாப்புப் படையினர் அங்கு அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். ராமர் கோயில் கட்டும் இடத்தில், அயோத்தி மற்றும் பிரக்யராஜ் பகுதியினைச் சேர்ந்த 21 சாமியார்கள் கலந்து கொண்டு, பூமி பூஜையினைச் செய்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், 170 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்கள், இணைய வழியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காலை 9.30 மணிக்கு விமானத்தின் மூலம் லக்னோ செல்லும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 10.40 மணியளவில் அயோத்தி செல்கின்றார். பின்னர் அங்கிருந்து 11.40 மணியளவில், அனுமான்கடி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்கின்றார்.

இதன் பின்னர், 11.55 மணியளவில் கிளம்பும் மோடி, 12 மணிக்கு ராம்ஜென்ம பூமியினை அடைகின்றார். அங்குள்ள ராம் லல்லா விராஜ்மன் என்ற குழந்தை ராமரை வணங்கிய பின், அந்த வளாகத்தில் பாரிஜாத மரத்தினை நடுகின்றார். 12.30 மணியளவில் பூமி பூஜையில் பங்கேற்ற பின், மூன்று மணி நேரம் அங்கு செலவிடுவார் என்று அவருடைய அட்டவணைத் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியினை, அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பார்ப்பதற்கு வசதியாக, நியூயார்க் சதுக்கத்தில் நேரலையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

HOT NEWS