கலவரத்தில் இறந்த போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்! பிரதேப் பரிசோதனை அறிக்கை!

26 February 2020 அரசியல்
rathanlalpolice.jpg

டெல்லியில், கடந்த இரண்டு நாட்களாக வன்முறையும், கலவரமும் நடைபெற்று வருகின்றது. தற்பொழுது வரை, சுமார் 18 பேர் இந்த கலவரத்தில் மரணமடைந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை அன்று, டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் போராட்டமானது, உச்சகட்ட கலவரமாக மாறியிருந்தது. அப்பொழுது, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த ரத்தன் லால் என்ற போலீஸ் அதிகாரி மீது, கல்வீச்சு நடத்தப்பட்டது. அதில், பலத்த காயமடைந்த ரத்தன் லால், இரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவர் இறந்து விட்டதாக, மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில், தற்பொழுது அவருடைய பிரேதப் பரிசோதனை அறிக்கையானது, வெளியாகி உள்ளது. அதில், அவர் இடது தோள்பட்டையில், துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனை, வலது தோள்பட்டை வழியாக நீக்கி உள்ளனர். இது தற்பொழுது அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. போராட்டம் நடைபெற்ற இடத்தில், துப்பாக்கிப் பயன்படுத்தப்பட்டு உள்ளது உறுதியாகி உள்ளது.

இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து, அங்கு ஊரடங்கு உத்தரவும், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இறந்த போன ரத்தன் லாலின் உடலானது, டெல்லியில் உள்ள அவருடைய வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாளை அவருடைய சொந்த ஊரான, ராஜஸ்தானில் உள்ள சிக்கார் மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

இதனிடையே, அவருடைய சொந்த ஊர் மக்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், இறந்த ரத்தன் லாலின் குடும்பத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு, அரசாங்க வேலையும், ரத்தன் லாலின் தாய்-தந்தைக்கு உதவித் தொகையும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர். தற்பொழுது வரை, டெல்லியில் நடைபெற்ற தாக்குதலில் 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

HOT NEWS