ஆன்லைன் மற்றும் செயலிகள் மூலம் கடன் வாங்குபவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்து உள்ளது.
நாளுக்கு நாள் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையினை விட, கடன் வழங்குபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றது. ஆன்லைன் மற்றும் செயலிகள் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் அதிகளவில் வட்டி வசூலிப்பதாகவும், மேலும், பணத்தினை உரிய நேரத்தில் செலுத்தாவிட்டால், தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் பலப் புகார்கள் எழுந்தன. வாடிக்கையாளர்களின் தகவல்களை, சமூக வலைதளங்களில் அவமானப்படுத்தும் விதத்தில் வெளியிடுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தன.
அதற்கு முடிவு கட்டும் வகையில், தற்பொழுது ரிசர்வ் வங்கியானது புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதன்படி, அதிகளவில் வட்டி வசூலிக்கம் நிறுவனங்கள் மற்றும் செயலிகள் குறித்து, போலீசிலோ, சைபர் க்ரைம் பிரிவிலோ புகார் அளிக்கலாம். மேலும், http://sachet.rbi.org.in/ என்ற வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ள செயலிகள் மற்றும் நிறுவனங்களிடம் மட்டும், கடன் பெறவும் அறிவுறுத்தி உள்ளது.