ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, தற்பொழுது ஜியோ ஜிகாஃபைர் என்ற திட்டத்தினை, அறிமுகப்படுத்தி உள்ளது. அதனை வரும் வாரங்களில், நம்முடையப் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜியோ ஜிகாஃபைபர் மூலம் மிக மலிவான விலையில், அதிவிரைவு பிராட்பேண்ட் சேவையை வழங்க ஜியோ முடிவு செய்துள்ளது. இலவச ஹெச்டி டிவி, இண்டர்நேஷனல் கால்ஸ் எனப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, அனைத்து போட்டி நிறுவனங்களின் வயிற்றிலும், புளியைக் கரைத்தது.
அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், தற்பொழுது மற்ற நிறுவனங்களும் இறங்கி உள்ளன. ஜியோவின் பிரதான எதிரியான ஏர்டெல் நிறுவனம், இந்தியாவின் பிராட்பேண்ட் சேவையில், நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. அது தற்பொழுது, தன்னுடைய வாடிக்கையாளர்களைக் காப்பாற்றிக் கொள்ள, புதிய சலுகைகளை அறிவிக்க உள்ளது. அதன்படி, அனைத்து பிராட்பேண்ட் சேவைகளும், பைபர் சேவைகளாக மாற்றப்பட உள்ளன. இதனால், இணையத்தின் வேகம் அதிவேகமாக மாறும். மேலும், இதற்கு எவ்விதப் பணமும் வசூலிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.
மேலும், 1,599 ரூபாய் திட்டத்தில் உள்ளவர்களுக்கு கூடுதலாக ஆறு மாதத்திற்கு சேர்த்து 1000 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும், மாதம் நூறு எம்பிபிஎஸ் வேகத்தில் 600 ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது. அதே போல், 1,099 ரூபாய் திட்டத்திற்கு 500 ஜிபி டேட்டாவை நூறு எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்க உள்ளது. மேலும், 799 ரூபாய் திட்டத்தில், 200 ஜிபி டேட்டாவை நூறு எம்பிபிஎஸ் வேகத்தில், வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏர்டெல்லைப் போல, டாடா ஸ்கை நிறுவனமும், பல திட்டங்களை அறிவித்துள்ளது. எப்படி இருப்பினும், நன்றாக கவனித்தோம் என்றால், ஜியோவின் குறைந்தபட்ச விலையில், கிடைக்கும், டேட்டாவை, ஏர்டெல் நிறுவனத்தின் அதிகபட்ச விலையில் தான் பெற முடியும். இதிலும், ஜியோ ஜிகாஃபைர் முன்னிலையில் உள்ளது.