டிக்டாக்கினைக் குறி வைத்துள்ள ரிலையன்ஸ்!

13 August 2020 அரசியல்
jio.jpg

டிக்டாக் நிறுவனத்தினை வாங்க நினைக்கும் நிறுவனங்களில், தற்பொழுது இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

உலகம் முழுக்கப் பல கோடிப் பயனர்களைக் கொண்டது டிக்டாக். இந்த செயலியினை தற்பொழுது இந்திய அரசு தடை செய்துள்ளது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நடைபெற்ற மோதல் காரணமாக, இந்திய அரசு பலப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இந்தத் தடையும் உள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவினை மேற்கோள் காட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டிக்டாக் நிறுவனத்தினை தடை செய்யும் ஆணையில் கையெழுத்திட்டு உள்ளார். அந்த நிறுவனத்தினை வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள அனுமதியும் அளித்துள்ளார். அவ்வாறு வாங்க இயலாத பட்சத்தில், அதனை தடை செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், தற்பொழுது இது குறித்துப் புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதன்படி, இந்த டிக்டாக் நிறுவனத்தினை வாங்கும் முயற்சியில், இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்கி உள்ளது. இது குறித்தப் பேச்சுவார்த்தையானது, கடந்த மாதமே துவங்கி விட்டது என, நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல், இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பானது, சர்வதேச சந்தையில் 50 பில்லியன் டாலராக உள்ளது.

இந்தியாவில் மட்டும் இதன் மதிப்பு, 37408 கோடியாக உள்ளது. இதன் பங்குகளை வாங்கும் முயற்சியிலும், மொத்தமாக இந்த நிறுவனத்தினை வாங்கும் முயற்சியிலும் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்கி உள்ளது. இது குறித்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். பேச்சுவார்த்தை ஒற்றுமையை எட்டும் பட்சத்தில், டிக்டாக் ஆப்பினை இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றுவது உறுதியாகிவிடும்.

HOT NEWS