இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது அமலில் இருக்க உள்ளது. மேலும், இது நீட்டிக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
இந்தப் பிரச்சனையின் காரணமாக, சினிமா சூட்டிங்கானது நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், சினிமாவினை மட்டுமே நம்பி வாழும் ஊழியர்களின் வாழ்க்கையானது, வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள் என, பெப்சி அமைப்பின் தலைவர், ஆர்கே செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.
அதனை முன்னிட்டு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சம், சூர்யா குடும்பித்தனர் சார்பில் 20 லட்சம், நயன்தாரா 20 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், விஜய் சேதுபதி 10 லட்ச ரூபாயினை வழங்கினர். தல அஜித் 25 லட்ச ரூபாயினை வழங்கினார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஆர்கே செல்வமணி.
அவர் பேசுகையில், தற்பொழுது வரை 2.45 கோடி ரூபாயானது உதவித் தொகையாக கிடைத்துள்ளது. 2,400 அரிசி மூட்டைகளும் வந்துள்ளன எனத் தெரிவித்துள்ளார். பெப்சி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயினை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். உதவித் தொகையினை கொண்டு, 15,000 பேருக்கு நிவாரண உதவி வழங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.