சென்னையில் எண்கவுண்டர்! பிரபல ரவுடி மரணம்!

25 September 2019 அரசியல்
gun.jpg

சென்னையில் நடைபெற்ற எண்கவுண்டரில், விழுப்புரத்தைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன் கொல்லப்பட்டார்.

விழுப்புரம் குயிலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அப்பகுதியில், கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட குற்றச் செயல்களை ஈடுபட்டு வந்தவர். இவர் மீது, 8 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள், 4 வெடிகுண்டு வீச்சு குறித்த வழக்குகள் உட்பட, மொத்தம் 28 வழக்குகள் உள்ளன.

வேறொரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன், சென்னையில் தன் குடும்பத்தினருடன் பதுங்கி இருப்பதாக, தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, சென்னை கொரட்டூரைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர், மணிகண்டன் பதுங்கியிருந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இவர்கள் வருவதைக் கண்ட மணிகண்டன், உதவி ஆய்வாளர் பிரபுவை அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். மேலும், எதிரில் வந்த பிரகாஷினையும் வெட்ட முயன்ற பொழுது, கையில் இருந்து துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார் பிரகாஷ். இதனால், ரவுடி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

இது குறித்து பேசிய எஸ்பி ஜெயக்குமார், இவர் நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்தவர் எனவும், வெட்டுப்பட்ட பிரபுவுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை கொடுக்கப்பட்டது எனவும், அவருடையத் தலையில், மொத்தம் 8 தையல் போடப்பட்டுள்ளது எனவும், மேல் சிகிச்சைக்காக அவர், அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS