ஆர்எஸ் பாரதி கைது! கொரோனா சோதனைக்கு அனுப்ப கோரிக்கை! ஜாமீன் கிடைத்தது!

23 May 2020 அரசியல்
rsbarathi.jpg

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, இன்று காலையில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 100 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டியலினத்தவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது, ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண்குமார் புகார் கொடுத்தார். அந்த புகார் பதிவு செய்யப்பட்டு 100 நாட்களை கடந்து விட்டது.

இந்த சூழ்நிலையில், திடீரென்று இன்று காலையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், அதிரடியாக ஆர்எஸ் பாரதியின் வீட்டிற்கு வந்தனர். அங்கு அவரை கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டதை அறிந்த தொண்டர்கள், அந்த வீட்டின் முன் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் இன்று நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்பொழுது, தன்னுடைய மகன் கொரோனா வார்டில் பணிபுரிவதாகவும், எனக்கு சளி, இருமல் உள்ளதாகவும், ஆதலால் என்னை கொரோனா பரிசோதனைக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், தான் ஓபிஎஸ் செய்துள்ள முறைகேடுகளைப் பற்றி புகார் அளித்துள்ளதால், அதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையில் ஆளும் அதிமுக அரசு ஈடுபட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ் பாரதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எனவும், இந்த குரோத நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும் கூறியிருக்கின்றார். இந்நிலையில் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி வரை, ஆர்எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

HOT NEWS