நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள்! எதிர்ப்பு தெரிவித்த ஆர்எஸ்எஸ் பிரிவு!

19 May 2020 அரசியல்
nirmalasitharaman1.jpg

நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளுக்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பின், பிரிவுகளுள் ஒன்றான பாரதிய மஸ்தூர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த மே-12ம் தேதி அன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பாரதப் பிரதமர் மோடி, இந்திய மக்களின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் சுமார் 20 லட்சம் கோடி ரூபாயினை நிதியமைச்சர் அறிவிப்பார் எனவும், 21ம் நூற்றாண்டினை சுதேச இந்தியாவால் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, 5 நாட்களாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். அதற்கு இந்தியாவின் பல்வேறு தரப்பினரும் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரிவுகளுள் ஒன்றான பாரதிய மஸ்தூர் சங்கமும் தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் விர்ஜேஷ் உபாத்யாய் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், எட்டு முக்கிய தொழில்பிரிவுகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதியமைச்சர் பேசியிருப்பது வேதனைக்குரியது. இது, மேலும் வேலைவாய்ப்பு இழப்புகளை ஏற்படுத்தும் விஷயமாகும். பொதுத்துறை நிறுவனங்களே, நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன எனவும் கூறியுள்ளார்.

பெரியப் பொருளாதார வல்லுநர்களையும், தயாரிப்பு நிறுவனங்களுடனும் பேசாமல் இவ்வாறு நிதியமைச்சர் பேசியிருப்பது ஏதேச்சையான செயலாகும். கொரோனா வைரஸ் போன்ற பாதிப்புக் காலத்தின் பொழுது, பொதுத் துறை நிறுவனங்களே நாட்டின் பொருளாதாரத்தினை காப்பாற்றி வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார். இது தற்பொழுது பேசுபொருளாகி உள்ளது.

HOT NEWS