இந்திய விமானப்படையில், வருகின்ற 2022ம் ஆண்டுக்குள், ருத்ரம் ரக ஏவுகணைகள் இணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது லடாக் மற்றும் லே பகுதிகளில் பதற்றம் நிலவி வருகின்றது. இதனால், இந்திய அரசு தன்னுடைய இராணுவப் பலத்தினைப் பெருக்குவதற்காக, இஸ்ரேல், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் ஒப்பந்தங்களை செய்து வருகின்றது. கூடுதலாக, பிரான்ஸ் நாட்டில் இருந்து 5 ரபேல் போர் விமானங்களும், இந்தியா வந்துள்ளன. இந்நிலையில், கூடுதலாக இன்னும் 3 விமானங்கள் இந்த மாத இறுதியில், இந்தியாவிற்கு வர உள்ளன.
அத்துடன் இந்தியாவின் டிஆர்டிஓ அமைப்பானது, புதிய ஏவுகணை சோதனைகளை செய்த வண்ணம் உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பல ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதித்து இந்திய இராணுவத்தில் இணைத்துள்ளது. ஒடிசாவின் பல்சோர் தீவில் உள்ள சோதனைப் பகுதியில், இந்திய டிஆர்டிஓ அமைப்பானது, ருத்ரம் ரக ஏவுகணைகளை புதிதாக சோதனை செய்தது. அந்த சோதனையானது, தற்பொழுது வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்பொழுதும் எதிரி நாட்டு விமானங்களையும், ஏவுகணைகளையும் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளையே பெரும்பாலும் தயாரிப்பார்கள். அந்த விமானங்களையும், ஏவுகணைகளையும், வழிநடத்தும் மற்றும் கண்டறியும் ரேடார்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சோதிப்பதோ அல்லது தயாரிப்பதோ கிடையாது. ஆனால், இந்தியா இந்த முறை வித்தியாசமான யுக்தியினைப் பின்பற்றி உள்ளது. ரேடார்களைத் தாக்கி அழிக்கின்ற ஏவுகணையினை இந்தியா தயாரித்து உள்ளது.
முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரேடாரினை, இந்தியாவின் ருத்ரம் ரக ஏவுகணைகள் வெற்றிகரமாகத் தாக்கி அழித்துள்ளன. இந்த ஏவுகணைகள் விரைவில், வெளிநாட்டு உயர் ரக ரேடார்கள் மீதும் சோதிக்கப்பட உள்ளன. ஒலியினை விட 2 மடங்கு வேகத்தில் பயணிக்கக் கூடிய விதத்தில் இந்த ஏவுகணையானது உருவாக்கப்பட்டு உள்ளது. இலக்கினை 250 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபடியே, அழிக்கும் விதத்தில், இது தன்னுடைய இலக்கினை மாற்றிக் கொள்ளும் சக்தி படைத்தது.
இந்த ஏவுகணையில், ஸ்க்ரெம்ஜெட் என்ஜின் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த ஏவுகணையின் இலக்கினை நம்மால் மாற்றி அமைக்க இயலும். இந்தியாவிலேயே முதன் முதலாக, ரேடார்களைத் தாக்கி அழிக்க வல்ல முதல் சூப்பர்சோனிக் ஏவுகணையாக இந்த ருத்ரம் உருவாக இருக்கின்றது. கதிர்வீச்சினை இந்த ஏவுகணையானது கண்டுபிடித்து விட்டால் அவ்வளவு தான். நொடிப் பொழுதில் தன்னுடைய ருத்ர தாண்டவத்தினை இந்த ஏவுகணை ஆடிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பலக் கட்ட சோதனைகள் நடத்தப்பட உள்ளன. இந்த சோதனைகள் அனைத்தும் மிக விரைவாக, அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சோதனைகள் முடிந்ததும், வருகின்ற 2021 இறுதியில் அல்லது 2022 தொடக்கத்தில் இந்த ஏவுகணைகள் இந்திய விமானப் படையில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு இணைக்கப்படும் பட்சத்தில், இந்திய விமானப்படையின் தரமானது அதிகரிக்கும்.