இந்தியாவிற்கு விரைவில் எஸ்-400 ஏவுகணைகள்! ரஷ்யா ஒப்புதல்!

01 July 2020 அரசியல்
s400missile.jpg

இந்தியாவிற்கு விரைவில் எஸ்-400 உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்பொழுது போர் உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. லடாக் பகுதியில் சீன இராணுவம் சுமார் 24,000 வீரர்களை குவித்து உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் தன்னுடைய இராணுவத்தினைக் குவித்து வருகின்றது. அதே சமயம், ஒரு வேளைப் போர் வந்தால் சீனாவின் தாக்குதலை சமாளிக்கவும், சீனாவுடன் சண்டையிடுவதற்குத் தேவையான ஆயுதங்களைப் பெறவும், இந்திய அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற வெற்றி திருநாள் விழாவில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார். அப்பொழுது, ரஷ்யாவிடம் ஏற்கனவே செய்திருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவசரத் தேவையாக புதிய ஆயுதங்களைத் தர வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

அதே போல், டாங்கிகள், ஆயுதங்களுடன் கூடிய வாகனங்கள் உள்ளிட்டவைகளை அடக்கிய புதிய பட்டியல் ஒன்றினையும் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. தற்பொழுது அவசரத் தேவையாக, எஸ்400 ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்காக, ரஷ்யாவுடன் 5.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய ஒப்பந்தமானது கடந்த 2018ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

தற்பொழுது நிலவுகின்ற அவசர நிலைக் காரணமாக, ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்க வேண்டும் என, இந்தியா தரப்பில் கூறப்பட்டது. அதனை ரஷ்யாவும் ஏற்றுக் கொண்டு உள்ளது. தற்பொழுது, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பிரச்சனை நிலவுவதால், ஆயுதங்களை உடனடியாக வழங்க உள்ளது ரஷ்யா. மீதமுள்ள தொகைக்கு உரிய ஆயுதங்களை வருகின்ற 2021ம் ஆண்டுக்குள் வழங்க உள்ளதாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூறியுள்ளது.

இந்த எஸ்400 ஏவுகணைகள் உலகின் சிறந்த ஏவுகணைகளுள் ஒன்று. இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தி, வானில் பறக்கின்ற விமானங்களை, தரையில் இருந்தே மிகத் துல்லியமாகத் தாக்க இயலும் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவும், இந்த ஆயுதங்களை வாங்கப் போட்டிப் போட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS