ஞாயிறுக் கிழமை மாலை 5 மணிக்கு, கமல்ஹாசன் சினிமாத் துறைக்கு வந்த 60 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதில், பல சினிமாப் பிரபலங்களும், நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயின் சார்பில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அஜித் குமார் வழக்கம் போல, இந்த விழாவிற்கும் வரவில்லை.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயின் தந்தையின் பிரபல திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், கமல் துணிச்சலோடு அரசியலில் இறங்கிவிட்டார். இது சாதாரண விஷயம் அல்ல. ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என, கோடான கோடி ரசிகர்கள் அவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
அரசியலுக்கு ரஜினிகாந்த் வந்தால், கமலும் அவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். அதுவே, தமிழ்நாட்டிற்கும் நல்லது, தமிழர்களுக்கும் நல்லது. அரசியிலில் முதுகில் குத்துபவர்கள் அதிகம் உள்ளனர். உங்கள் முதுகுக்குப் பின்னால் இருந்து கொண்டு, நான் உங்களைப் பார்த்துக் கொள்வேன் என அவர் கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், நீங்கள் இருவரும் ஆண்டது போதும் என நினைத்த பிறகு, உங்கள் தம்பிகள் அரசியலுக்கு வந்தால், அவர்களுக்கு வழிவிட வேண்டும் எனவும் கூறினார். இதற்கு, அங்கிருந்த ரசிகர்கள் விசலடித்துக் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.