பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, தான் செலுத்த வேண்டிய 10 கோடி ரூபாய் அபராதத்தினை செலுத்தியுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரம்புக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கின்றார் சசிகலா. அவருடன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரும் சிறையில் இருக்கின்றனர். இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு, அபராதத்துடன் கூடியத் தண்டனையினை நீதிமன்றம் விதித்தது. இதனைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்பொழுது நான்கு ஆண்டு காலத் தண்டனையானது, முடிவடைய உள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தினைக் கட்டியதும், அவர் விடுதலை செய்யப்படுவார் எனவும், அபராதத்தினை கட்டாவிடில், கூடுதலாக ஒரு ஆண்டு சிறையில் இருக்க நேரிடும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து, அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், அபராதத்தினை கட்டும் பட்சத்தில், வருகின்ற ஜனவரி 27ம் தேதி 2021ம் ஆண்டு, சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் எனவும், அபராதம் கட்டாவிடில் 2022ம் ஆண்டில் விடுதலை செய்யப்படுவார் எனவும் கூறப்பட்டது. இந்த சூழலில், தற்பொழுது சசிகலா செலுத்த வேண்டிய அபராதத் தொகையானது, அவர் சார்பில் செலுத்தப்பட்டது. சுமார் 10 கோடியே 10 லட்ச ரூபாயினை, அவர் செலுத்தி உள்ளார். இதனால் அவர் ஜனவரி 27ம் தேதி அன்று வெளியாவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.