சாத்தான்குளம் காவல்நிலையத்தினைச் சேர்ந்த முத்துராஜ் என்ற காவலர், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மகன் பென்னிங்ஸ் மற்றும் தந்தை ஜெயராஜ் ஆகியோர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மரணமடைந்தனர். இது குறித்து, சிபிசிஐடி நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் சார்பில், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது.
இந்த விசாரணையின் பொழுது, பலத் திடுக்கிடும் சம்பவங்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருத்தப்பட்ட காவலர்களை, சிபிசிஐடிப் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, இந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்த முத்துராஜ் என்றக் காவலர் மீது, சிபிசிஐடிப் போலீசார் இரண்டு வழக்குகள் பதிவு செய்து தேடி வருகின்றனர். அவர் தற்பொழுது வரை கிடைக்கவில்லை என்பதால், அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். மேலும், இந்த வழக்குத் தொடர்பாக, இதுவரை யாரும் அப்ரூவர் ஆகவில்லை எனவும் தெரிவித்து உள்ளனர்.
இதுவரை சப்-இண்ஸ்பெக்டர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ஏட்டு முருகன் மற்றும் முத்துராஜ் உள்ளிட்டோர் மீது கொலை, அடைத்து வைத்தல் மற்றும் தடயங்களை அழித்தல் ஆகியப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், முத்துராஜ் தவிர்த்து மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். ரகு கணேஷை தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர், 16 நாட்கள், நீதிமன்றக் காவலில் அவரை வைத்துள்ளனர். ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், முருகன் ஆகியோரும் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் அவர்களும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்கள் மூன்று பேரிணையும், சிபிசிஐடி போலீசார் பேராவூரணி சிறையில் அடைத்தனர். முத்துராஜ் மற்றும் அவருடன் பணியாற்றிய மற்றொருக் காவலரையும் தற்பொழுது வரை, சிபிசிஐடிப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.