மேஜை மீது குனிய வைத்து பின்புறத்தில் அடி! போலீசாரின் வெறிச் செயலை அம்பலமாக்கிய சிபிஐ FIR!

26 October 2020 அரசியல்
sathankulamlockup.jpg

தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், சிபிஐ அமைப்பானது பல விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில், செல்போன் கடையினை வைத்திருப்பவர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ். தந்தை மற்றும் மகனான இவர்கள், அப்பகுதி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை அழைத்துச் சென்ற போலீசார், இரவு முழுவதும் அவர்களை அடித்துச் சித்திரவதைச் செய்துள்ளனர். அதனால் பாதிக்கப்பட்ட அவர்களில், பென்னிங்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரணமடைந்தார். அவருடைய தந்தை ஜெயராஜ், காவல் நிலையத்திலேயே நெஞ்சு வலியால் மரணமடைந்தார்.

இந்த சம்பவம், இந்தியா முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, நீதிபதி நேரில் அந்த காவல்நிலையத்திற்குச் சென்று, சாட்சிகளை சேகரித்தார். இதனிடையே, இந்த வழக்கினை சிபிஐ பிரிவிற்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, சிபிஐ பிரிவானது, அனைத்து தகவல்களையும் சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து பெற்றது.

அந்த வழக்கினைத் தற்பொழுது வரை, சிபிஐ அமைப்பு தான் விசாரித்து வருகின்றது. இந்த விசாரணக் குறித்த எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் பலவித திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோர், அங்கு இரவு முழுவதும், காவலர்களிடம் அடி வாங்கி உள்ளனர். உடலின் பின் பகுதியில் உள்ள சதைகள் கிழியும் அளவிற்கு, போலீசார் அடித்துள்ளனர்.

இரவு முழுவதும் அந்த ஸ்டேசனில் அலறல் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. இருவருடைய ரத்தமும், அந்த ஸ்டேசன் முழுக்க சிதறியிருக்கின்றன. மேஜைகள், நாற்காலிகள், சுவர்கள், லத்திகள் ஆகியவைகளில் இவர்களின் ரத்தக் கறைப் படிந்திருக்கின்றன. சிதறிக் கிடந்த இரத்தத்தைத் துடைக்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால், அவர்கள் உடையிலும் இரத்தம் தெறித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது தான், முதன் முறையாக அவர்கள் தங்களுடைய போலீஸ் உடையினை மாற்றியுள்ளனர். மேலும், ரத்தம் படிந்த ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் உடைகளை தூய்மைப்படுத்தி, அதனை சுத்தம் செய்து தடயத்தினை அகற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு இருப்பது உண்மையாகி உள்ளது. தொடர்ந்து, விசாரணை நடைபெற்றுக் கொண்டே இருப்பதால், இன்னும் பல உண்மைகள் வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது.

HOT NEWS