தூத்துக்குடியில் தந்தை மகன் போலீஸ் காவல் மரண வழக்கினை விசாரித்து வரும் சிபிஐ, அவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்திருப்பதை நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோர், போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு காவல்நிலையத்தில் அடிக்கப்பட்டனர். இதில், படுகாயம் அடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதனையடுத்து, தன்னிச்சையாக மக்கள் மத்தியில் இது பற்றிய பிரச்சனை, விஸ்வரூபம் எடுத்தது. இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் விசாரிக்க முன் வந்தது.
இந்த வழக்கானது, தமிழக அரசால் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அது குறித்து பதிலளித்துள்ள சிபிஐ தரப்பு, ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கின்றது எனத் தெரிவித்து உள்ளது.
மேலும், இந்த விஷயம் ஆய்வாளர் ஸ்ரீதருக்குத் தெரியாமல் நடந்திருக்காது என்றுக் கூறியுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது.