12 மணி நேரம் கூட ஆகலாம்! புதிய குழி தோண்டுவது குறித்து யோசனை!

28 October 2019 அரசியல்
savesurjith.jpg

கிட்டத்தட்ட 65 மணி நேரம் ஆகியும், இன்னும் குழியில் விழுந்த குழந்தையை மீட்க முடியாமல் அரசு அதிகாரிகள் திணறி வருகின்றனர். தீபாவளிக்கு முந்தைய நாள் விழுந்த குழந்தையை, தீபாவளி முடிந்தும் காப்பாற்ற முடியாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக, சமூக வலைதளங்களில் பொதுமக்களை ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

திருச்சியின் மணப்பாறைப் பகுதியில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில், குடிநீருக்காக 5 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட குழியில், 25ம் தேதி அன்று மாலை 5.40 மணியளவில், சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக விழுந்தது. இதனால் அதிர்ந்த அக்குழந்தையின் தாய், குழந்தையை மீட்பதற்காக கையை நீட்டிப் பிடிக்க முயற்சித்துள்ளார். அப்பொழுது, 10 அடியில் இருந்து குழந்தை, 25 அடிக்கு சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், மருத்துவக் குழு என அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதனைக் கேள்விப்பட்ட அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முதலில் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள், அக்குழந்தையின் கையில் முதலில் கயிற்றினைக் கட்டி, பிடித்து நிறுத்தி வைத்தனர். மற்றொரு கையில் கயிறு கட்டும் பொழுது, முதல் முயற்சித் தோல்வி அடைந்தது. இதனையடுத்து, அடுத்ததாக மீண்டும் மற்றொரு கையில் கயிறு கட்டும் முயற்சி நடைபெற்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக, குழந்தையைத் தூக்கும் பொழுது, மண் சரிந்து விழுந்தது. அது மட்டுமின்றி, குழந்தையைப் பிடித்திருந்த கயிற்றில் இருந்து, குழந்தையை விலகியதால் அந்தக் குழந்தை 25 அடியில் இருந்து 75 அடிக்கு கீழே சென்றுவிட்டது.

இதனையடுத்து, அக்குழந்தையின் தாய், அந்தக் குழந்தையிடம், அழா கண்ணு, அம்மா எப்படியாவது உண்ண எடுத்துர்றேன் எனக் கூறினார். அதற்கு அக்குழந்தை ஹீம்ம்! என்றது. இதனையடுத்து, ஐஐடி சான்றழித்த, நாமக்கல் குழுவினர், மணிகண்டன் குழுவினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அந்த போர்வெல் குழியானது உள்ளே 4 இன்ச் விட்டம் உள்ளதால், அந்த குழுவினரால் மீட்க முடியவில்லை.

ஆனால், அவர்கள் வைத்திருந்த கருவி மூலம், தொடர்ந்து, குழந்தைக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. அதன் மூச்சு சப்தத்தினை கேட்பதற்கு நுண்ணிய மைக், மற்றும் அக்குழந்தையின் அசைவினை கண்டறிய கேமிரா உள்ளிட்டவைப் பயன்படுத்தப்பட்டன.

பின்னர், இந்த மீட்கும் முயற்சியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினை ஈடுபடுத்த அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதே போல், தமிழக பேரிடர் மீட்புப் படையும், என்எல்சி சுரங்க மீட்புப் படையும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து, அந்தக் குழந்தை விழுந்து கிடக்கும் இடத்திற்கு அருகிலேயே, ஒரு குழியைத் தோண்டி பின் இரண்டு குழிகளுக்கும் இடையில் சுரங்கம் அமைத்துக் காப்பாற்றும் முயற்சித் தொடங்கியது. அதற்காக, ஓன்ஜிசியின் குழி தோண்டும் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது.

அந்த இயந்திரம் வந்து சேருவதற்குள் ஐந்து முறை அந்த வாகனம் பழுதானது. மேலும், அந்த வாகனத்தை ஏற்றி வந்த லாரியும் இரண்டு முறை பஞ்சர் ஆனது. பின்னர், நேற்று காலையில் குழித் தோண்டும் பணித் தொடங்கியது. அதில், ரிக் இயந்திரம் ஒரு மீட்டர் விட்டம் உடைய 100 அடி ஆழமுள்ள குழி தோண்ட திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், சரியாக 30 அடி தோண்டியதும், ரிக் இயந்திரம் பழுதானது. இதனால், மற்றொரு ரிக் வாகனம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் முயற்சித் தொடர்ந்து நடந்தது. ஆனால், குழி தோண்டும் இடத்தில், பாறைகள் இருந்ததால், குழியினைத் தோண்ட முடியவில்லை. இதனையடுத்து, ரிக் இயந்திரம் 40 அடியை நெருங்கும் பொழுது, குழி தோண்டும் பிளேட் பழுதானது.

இதனால், மீண்டும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், முயற்சியினைக் கைவிடாமல், குழி தோண்டுவதற்காக, புதிய டிரில் பிட், சென்னையில் இருந்து வர வழைக்கப்பட்டுள்ளது. இது தற்பொழுது திருச்சியினை விரைவில் வந்தடையும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மீட்புப் பணிகள் குறித்துப் பேட்டியளித்த, வருவாய்துறை ஆணையர் திரு. ராதா கிருஷ்ணன் கூறுகையில், நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நாம் செய்வோம். தற்பொழுது, குழி தோண்டும் இடத்தில் அதிகளவில் பாறைகள் இருப்பதனால், அங்கு குழி தோண்ட இயலவில்லை. இருப்பினும், முயற்சிகள் தொடர்கின்றன. தொடர்ந்து, குழந்தையின் பெற்றோர்களுக்கும், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மனநல மருத்துவர்களும் அவர்களுக்கு அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.

தேவைப்படும் பட்சத்தில் மற்றொரு இடத்தில், 85 முதல் 90 அடி ஆழமுள்ள குழித் தோண்டப்படும் எனவும் கூறினார். இருப்பினும், குழி தோண்டுவதால், ஒரு இன்ச் அளவிற்கு குழந்தையின் மீது, மண் விழுந்துள்ளதாகவும், இதனால், குழி தோண்டுவது மெதுவாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். பலரும் வாட்ஸ் ஆப்பில், பல யுக்திகளைக் கூறி வருகின்றனர். அவைகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி யோசிக்க வேண்டி உள்ளது. மேலும், தற்பொழுது குழி தோண்டும் இடத்தில், தற்பொழுது பாறைகள் இருந்தாலும், 40 அடிக்கு கீழே கரிசல் மண் இருக்க வாய்ப்புள்ளதாக, ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் என நம்பிக்கைத் தெரிவித்தார். எக்காரணம் கொண்டும் மீட்புப் பணி கைவிடப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

மீட்புப் பணிகளைப் பார்வையிடுவதற்கு, நேற்று தமிழக துணை முதல்வர் திரு. ஓ பன்னீர் செல்வம் வருகை தந்திருந்தார். குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் ஆரம்பித்தில் இருந்து கண்காணித்து வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், நேற்று முன்தினம் இரவு குழந்தையின் உடலில் அசைவு தெரிந்தது எனவும், நேற்று அசைவுகள் எதுவும் தென்படவில்லை எனவும் கவலைத் தெரிவித்தார்.

இந்நிலையில், ரிக் இயந்திரத்திற்குப் பதில், போர்வெல் இயந்திரத்தின் மூலம், துளையிட முடிவு செய்துள்ளனர்.

HOT NEWS