குரூப்-2 தேர்வு முறைகேடு! இருவர் கைது! விரிவடையும் விசாரணை!

02 February 2020 அரசியல்
tnpsc.jpg

தமிழகத்தில் நடத்தப்பட்ட, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டவர்களின் பெயர்களை நீக்கி, மற்ற தேர்வர்களின் பெயர்களுடன் புதிய ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், குரூப்-2 தேர்விலும், முறைகேடு நடைபெற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என சந்தேகப்பட்டதால், குரூப் 2 தேர்வு குறித்தும், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த ஆரம்பித்தனர். இதனடிப்படையில், முறைகேட்டில் ஈடுபட்டதாக, தற்பொழுது இரண்டு பேரினை போலீசார் கைது செய்துள்ளனர். ஜனவரி 31ம் தேதி அன்று, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சார்பில், புகார் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட, சிபிசிஐடி போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர்.

அப்பொழுது, கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, 42 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், 2 பேர் தவறு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்துள்ளனர்.

இந்த பிரச்சனைக்கு மையப் புள்ளியாக இருக்கும், ஜெயக்குமார் மற்றும் காவலர் சித்தாண்டி ஆகியோர், தலைமறைவாகி இருக்கின்றனர். இவர்களை, தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, அனைத்து விமானநிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுகப்பட்டு உள்ளது.

HOT NEWS