தமிழகம் முழுக்க உள்ளப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையானது இன்று ஆரம்பமானது.
இந்தியா முழுக்க கடந்த மார்ச் மாதம் தொடங்கி, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், பள்ளிகளில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே பாதி வரை முடிந்திருந்த 12ம் வகுப்புத் தேர்வுகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்பட்டன.
பத்தாம் வகுப்புத் தேர்வுகளை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்தார். இந்நிலையில் லாக்டவுன் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருப்பதால், பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை எப்பொழுது நடைபெறும் என அனைவரும் காத்திருந்தனர். பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியாகி விட்டதால், ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை நடைபெறும் என, தமிழக அரசு அறிவித்தது.
இந்த சூழ்நிலையில், தற்பொழுது பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது ஆரம்பித்து உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள், தங்களுடையப் பிள்ளைகளை சேர்ப்பதற்காக காலை முதலே, ஆவலுடன் காத்திருந்து சேர்க்கின்றனர். பள்ளிக் கட்டணம் கட்டுதல், நோட்டுப் புத்தகங்களை வாங்குதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் சமூக இடைவெளியினைப் பின்பற்றி செய்து வருகின்றனர்.