சிவசேனா ஆட்சி! இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

22 November 2019 அரசியல்
shivsena.jpg

சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க, காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்பிருப்பதாக, சிவசேனா நம்புகின்றது.

பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது, சிவசேனா. அக்கட்சிகள் இரண்டுமே நல்ல வெற்றியினைப் பெற்றன. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை பாஜகவால் பெற இயலவில்லை. இதனால், சிவசேனாவின் உதவி இல்லாமல், மஹாராஷ்டிராவில் பாஜகவினால் ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இதனையடுத்து, சுழற்சி முறையில், முதல்வர் பதவியினை இருக கட்சிகளுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, சிவசேனா கூறியது.

இதனை பாஜக ஏற்க மறுத்தது. ஆளுநர் பாஜகவினை ஆட்சியமைக்க அழைத்தார். இருப்பினும், போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், அக்கட்சியானது பின்வாங்கியது. பின் சிவ சேனா கட்சியினை ஆட்சியமைக்க, மஹாராஷ்டிரா ஆளுநர் பஹத் சிங் அழைத்தார். ஆனால், 48 மணி நேர அவகாசம் கேட்டது சிவசேனா. ஆளுநர் மறுக்கவே, சிவசேனாவும் ஆட்சியமைப்பதில் இருந்து பின் வாங்கியது. இதனையடுத்து, கடந்த 12ம் தேதி அன்று, மஹாராஷ்டிராவில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

அடுத்த ஆறு மாதத்திற்குள் ஆட்சி அமைக்க வேண்டும், இல்லையென்றால் கண்டிப்பாக தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து, ஆட்சி அமைக்க சிவசேனா தீவிரம் காட்டியது. பலமுறை, மூன்று கட்சிகளும் இணைந்துப் பேச்சு வார்த்தை நடத்தின. இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், தற்பொழுது நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தியினை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சந்தித்துப் பேசினார்.

பின், தன்னுடைய வீட்டில் அவசரமாக கட்சியின் காரியக் கமிட்டி மீட்டிங்கினை நடத்தினார் சோனியா. அதில், காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், சிவசேனா கட்சிக்கு ஆட்சி அமைக்க ஒருமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும், முதல்வர் பதவியினை சிவசேனா இரண்டரை ஆண்டுகளும், தேசியவாத காங்கிரஸ் அடுத்த இரண்டரை ஆண்டுகளும் பங்கு பெற முடிவு செய்துள்ளன. சிவசேனா சார்பில், உத்தவ் தாக்ரேயும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவும் முதல்வராக செயல்பட உள்ளனர். மேலும், ஆட்சியில் மூன்றாம் இடம் பிடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது.

HOT NEWS