தேர்தல் நடைபெற்று, தேர்தல் முடிவுகளும் வெளிவந்து விட்டன. ஹரியானாவிற்கும், மஹாராஷ்டிராவிற்கும் ஒரே நேரத்தில் தான் தேர்தல் முடிவுகள் வெளியாகின.
ஹரியானாவில், பாஜக வெற்றிகரமாக ஆட்சி அமைத்துவிட்டது. ஆனால், மஹாராஷ்டிராவில் நடைபெற்று வரும் பஞ்சாயத்து முடிந்தபாடில்லை. நாளை ஒரு நாளே அவகாசம் உள்ள நிலையில், இன்று மாலைக்குள் சுமூகமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பாஜகவிற்கும் சிவ சேனாவிற்கும் இடையே கருத்துக்கள் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், சிவ சேனா தரப்பானது, முதல்வர் பதவி விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக உள்ளது. முதல்வர் பதவியினை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. முதல் இரண்டரை வருடம் ஒரு கட்சியும், அடுத்த இரண்டரை வருடம், மற்றொரு கட்சியும் முதல்வர் பதவியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தது.
இதனை ஏற்றுக் கொள்ள பாஜக மறுத்துவிட்டது. இதனை அடுத்து, அம்மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆர்எஸ்எஸ், தலைவர் மோகன் பகவத்தினை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், சிவசேனாவிற்கு, என்ஆர் காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என அக்கட்சியின் தலைவர், சரத் பவார் கூறியுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியினை சந்தித்தப் பிறகு, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சரத் பவார் சிவ சேனாவிற்கு, என் ஆர் காங்கிரஸூம், காங்கிரஸ் கட்சியும் ஆதரவளிக்காது எனத் தெரிவித்தார்.
இதனால் பாஜகவும், சிவசேனாவும் இணைந்தே ஆட்சி அமைக்கும் இக்கட்டான சூழ்ந்திலை உருவாகி உள்ளது. பாஜகவிற்கு சிவசேனாவினை விட்டால் வேறு வழியில்லை. அதே போல், சிவசேனாவிற்கும் பாஜகவினை விட்டால் வேறு வழியில்லை. இந்நிலையில், இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால், இருவரும் இணைந்து ஆட்சி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரு வேளை காலம் கடந்துவிட்டால், மஹாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.