வில்சன் எஸ்ஐ கொலை வழக்கு! குற்றவாளியை நெருங்கும் போலீஸ்!

14 January 2020 அரசியல்
siwilsoncase.jpg

கன்னியாகுமரி களியக்காவிளைப் பகுதியில், பணி செய்து கொண்டிருந்த சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் குற்றவாளியை நெருங்கி விட்டதாக போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டு உள்ளது.

களியக்காவிளைப் பகுதியில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில், கடந்த 8ம் தேதி இரவு 9.30 மணியளவில் சிறப்பு எஸ்ஐ வில்சன் பணியில் இருந்தார். அப்பொழுது, அதன் வழியாக வந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், சம்பவ இடத்திலேயே வில்சன் மரணமடைந்தார்.

ஒரு போலீசாருக்கு இப்படியொரு பிரச்சனை ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தினை, மாவட்ட ஆட்சியர், போலீஸ் உயர் அதிகாரிகள் எனப் பலரும் பார்வையிட்டனர். பின்னர், அவருடைய உடலுக்கு அரச மரியாதை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய மரணத்திற்கு இழப்பீடாக, தமிழக அரசு ஒரு கோடி ரூபாயினை அறிவித்துள்ளது. திமுக தங்களுடைய சார்பில் 5 லட்ச ரூபாயினை அறிவித்துள்ளது.

இந்நிலையில், எஸ்ஐ வில்சனை கொலை செய்ததை கண்டுபிடிக்க, தமிழகத்தின் சார்பில் 10 தனிப்படைகளும், கேரளக் காவல்துறையின் சார்பில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இதில், கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டையைச் சேர்ந்த சமீம் என்பவரையும், தவுபிக் என்பவரையும், தேடும் குற்றவாளிகாக காவல்துறை அறிவித்தது.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் தலைமையில் தான், தற்பொழுது குற்றவாளிகளைத் தேடும் பணியானது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீநாத் பேசும் பொழுது, தேடப்படும் நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சமீம் மற்றும் தவுபிக்கின் நண்பர்களுடன் விசாரணை நடைபெற்று வருகின்றது. இருவரையும் கைது செய்த பின்னர், வில்சன் கொலையில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது தெரிய வரும்.

இந்தக் கொலைத் தொடர்பாக, கேரளாவில் நான்கு பேரினை, போலீசார் கைது செய்துள்ளனர் எனவும், அதில் ஒரு முக்கியக் குற்றவாளியைப் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. விசாரணைக்குப் பின்னரே, அந்த நபர் பற்றியத் தகவல் வெளியாகும் எனவும் கூறப்படுகின்றது.

HOT NEWS