எஸ் ஐ வில்சன் கொலை வழக்கு! தீவிரவாதிகளின் சதி அம்பலம்! 20 பேரைக் கொல்லத் திட்டம்!

18 January 2020 அரசியல்
siwilson1.jpg

எஸ் ஐ வில்சனைக் கொலை செய்தவர்கள், மேலும் 20 பேரினைக் கொல்ல திட்டம் தீட்டியிருந்ததாக எஸ்பி ஸ்ரீநாத் கூறியிருக்கின்றார்.

ஜனவரி 9ம் தேதி அன்று, இரவு 9.30 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில், பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ வில்சன் என்பவரை, பைக்கில் வந்த இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர்.

அவர்கள், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவரை மீட்ட பின், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே 57 வயதுடைய எஸ்ஐ வில்சன் மரணமடைந்தார். அதிக இரத்தம் உடலில் இருந்து வெளியேறியதால், மரணமடைந்ததாக, மருத்துவ அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, இந்தக் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட அவர்களைக் கண்டுபிடிக்க, ஸ்ரீநாத் தலைமையில் 10 தனிப்படைகள் தமிழகத்தின் சார்பிலும், குற்றச் சம்பவமானது கேரள எல்லைப் பகுதியில் நடைபெற்றதால், கேரளாவின் சார்பில் 4 தனிப்படைகளும் அமைத்து, குற்றவாளிகளைப் போலீசார் தேட ஆரம்பித்தனர்.

கொலை செய்த தவுபிக் மற்றும் சமீம் என்ற இருவரையும், கர்நாடகாவில் உள்ள இந்திராலி ரயில் நிலையத்தில் வைத்து, போலீசார் கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். அவர்கள் இருவரையும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவினை அடுத்து ஜனவரி 20ம் தேதி வரை, அவர்களை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இது பற்றி பேசிய எஸ்பி ஸ்ரீநாத், சமீம் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த இரண்டு பேரும் சேர்ந்து, சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசாரைக் கொல்ல திட்டமிட்டு இருந்தது, விசாரணையில் தெரிய வந்தது. மேலும், தங்களுடைய கூட்டாளிகளைக் கைது செய்ததற்காக, பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த செயல்களை செய்ய அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார். தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, இரண்டு பேரையும் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக, தகவல்கள் பரவி வருகின்றன.

இவர்கள் இருவருக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளின் தொடர்பு இருக்கும் என்பதால், இவர்களிடம் என்ஐஏ விசாரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகின்றது.

HOT NEWS