கோவையை மையமாகக் கொண்டு செயல்படும், சிம்பிளிசிட்டி வலைதளத்தின் ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்கு, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய கண்டனத்தினைத் தெரிவித்து உள்ளனர்.
கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனைகளில், சரியான அன்றாட வசதிகள் செய்து தரப்படவில்லை என்று செய்தி வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி அன்று, இந்த செய்தி வெளியிடப்பட்டது. மேலும், அங்கு படிக்கின்ற மருத்துவ மாணவர்களுக்கு முறையான உணவு வசதி செய்து தரப்படவில்லை என்று செய்தி வெளியிடப்பட்டது.
அதுமட்டுமின்றி ஏப்ரல் 17ம் தேதி அன்று, பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை உள்ளிட்டவைகளில் முறைகேடு நடப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சியின் உதவி ஆணையளராக பணியாற்றும் சுந்தர்ராஜன் போலீசில் புகார் தெரிவித்தார்.
அவருடையப் புகாரில், பொய்யான செய்தியினைப் பரப்பி, ஊழியர்களைப் போராடத் தூண்டும் விதத்தில் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக கூறியுள்ளார். அதனால், அதன் நிறுவனர் மற்றும் ஆசிரியரான ஆண்ட்ரூஸ் சாம் என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து, போலீசார் சாம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அமமுக தலைவர் தினகரன் உள்ளிட்டோர் தங்களுடையக் கண்டனத்தினைத் தெரிவித்துள்ளனர்.
கோவையில் #Corona தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என திமுக MLA கார்த்திக் சுட்டிக்காட்டியதை வெளியிட்ட 'சிம்ப்ளிசிட்டி' இணைய இதழின் பதிப்பாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியனை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
— M.K.Stalin (@mkstalin) April 24, 2020
அவரை விடுவித்து, ஊடகத்தினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திடுக. pic.twitter.com/rzwxyFxMRO
கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உள்ள குறைகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டதற்காக கோயம்புத்தூரில் இணையதள பத்திரிகையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 24, 2020