கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியானது 225 ரூபாய்க்குள் தயாரிக்க, சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளது.
உலகம் முழுக்கப் பரவி உள்ள கொரோனா வைரஸிற்கு எதிராக, உலகின் பல முன்னணி நாடுகளும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இதில், ரஷ்ய அரசு தற்பொழுது உலகின் முதல் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தினைக் கண்டுபிடித்து உள்ளது. அதனைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது.
இந்தியாவும் தற்பொழுது மருந்து தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதில், சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனமானது பல காலமாக Gavi என்ற நிறுவனத்துடன் இணைந்து, பல மருந்துகளைத் தயாரித்து வருகின்றது. தற்பொழுது கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து கொரோனாவிற்கான மருந்தினைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
இதற்காக, கேட்ஸ் (பில் கேட்ஸ்) மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், சீரம் நிறுவனத்திற்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது. இதனால், ஏழை மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத நாடுகளுக்கு மிகக் குறைந்த விலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்க இயலும் என்றுக் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மட்டும் இந்த ஊசியானது, 225 ரூபாய்க்கு கிடைக்கும் என்றுக் கூறப்பட்டு உள்ளது. இதற்காக அந்த மருந்து தயாரிக்கும் நிறுவனமானது, தற்பொழுது 10 கோடி ஊசிகளைத் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.