தங்களுக்கு 170 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக, சிவ சேனா கட்சியினர் அறிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த மஹாராஷ்டிரா சட்டமன்ற இடைத்தேர்தலில், பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா 56 இடங்களில் வென்றது. பாஜக 105 இடங்களில் வென்றது. இதனால், ஆட்சி அமைக்க இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், பெரும்பான்மை கிடைத்துவிடும் என்ற நிலையில், தங்களுக்கு இரண்டரை வருடம் முதலமைச்சர் பதவியினை பாஜக எழுத்துப்பூர்வமாக தர வேண்டும். அப்பொழுது தான் பாஜக ஆட்சியமைக்க ஆதரவளிக்க முடியும் என்று, சிவசேனா கூறியது. மேலும், அமைச்சர் பதவிகளும் வேண்டும் எனவும் அக்கட்சி கூறியது. இதற்கு மறுப்புத் தெரிவித்து, பாஜகவின் தேவிந்திர பட்னாவீஸ் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
இருப்பினும், தங்களுடைய முடிவில் மாற்றமில்லை என்ற சிவ சேனா கூறியது. இதனையடுத்து, முதல்வர் பதவியைத் தர முடியாது என பாஜக கூறிவிட்டது. இதனால் கடுப்பான சிவசேனா, கடந்த செவ்வாய் கிழமை நடைபெற இருந்த பேச்சுவார்த்தைக் கூட்டத்தினை ரத்து செய்தது. மேலும், தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து ஆதரவு கோரியது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவினையும் பெரும் முயற்சியில் தற்பொழுது சிவசேனா ஈடுபட்டுள்ளது. இதற்காக, இன்று சரத் பவார் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தியினை சந்திக்க உள்ளார் என்றத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்த சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத், எங்களுக்கு 170 எம்எல்ஏக்களிம் ஆதரவு இருக்கின்றது. இன்று மாலை, மாநில ஆளுநரை சந்தித்து இது குறித்துப் பேச இருக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.
இது தற்பொழுது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை காங்கிரஸூம், சிவசேனாவிற்கு ஆதரவளித்தால் என்ன ஆகும் என்ற கேள்வி தற்பொழுது நிலவி வருகின்றது.