ஹரியானா மாநிலத்தினைச் சேர்ந்த டிக்டாக் தளத்தில் புகழ்பெற்றவும் பாஜக உறுப்பினருமான சோனாலி போகத், அரசு அதிகாரி ஒருவரை செருப்பால் அடித்த சம்பவம் வைரலாகி வருகின்றது.
ஹரியானா மாநிலம் ஹிசார் உழவர் சந்தைக்கு சென்ற சோனாலி போகத், விவசாயிகளிடம் உரையாடி உள்ளார். அப்பொழுது அங்கிருந்த விவசாயிகள், அடுக்கடுக்காக தங்களுடையப் புகார்களை சோனாலி போகத்திடம் வைத்துள்ளனர். அங்குள்ள சந்தைக்கு பலப் பிரச்சனைகள் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து, அந்த சந்தையின் குழு செயலாளர் சுல்தான் சிங்கிடம் இது பற்றிப் பேசியுள்ளார் சோனாலி.
அவ்வளவு தான், ஆத்திரமடைந்த சுல்தான், சோனாலியினை கடுமையான வார்த்தைகளால் பேசி, வசை பாடியுள்ளார். இதனால், கடுப்பான சோனாலி, காலில் மாட்டியிருந்த செருப்பாலேயே அந்த செயலாளர் சுல்தானை அடித்து காயப்படுத்தி உள்ளார். இந்த சம்பவம், வீடியோவாக எடுக்கப்பட்டது. இதனை, பலர் சமூக வலைதளங்களில் தற்பொழுது பகிர்ந்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தற்பொழுது அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர் மீது பாஜகவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்கிரஸார் கூறி வருகின்றனர். இது தற்பொழுது பெருமளவில் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.