உலகின் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் சிம்ம சொப்பணமாக இருந்த நிறுவனம் என்றால், அது சோனி. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உலகின் முன்னணி நிறுவனமான இது, தற்பொழுது ஸ்மார்ட்போன் உலகில் திண்டாடி வருகின்றது.
ஜப்பான் நாட்டினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சோனி நிறுவனமானது, சோனி எக்ஸ்ப்ரியா என்ற பெயரில் தன்னுடைய ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றது. அந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆரம்பக் காலத்தில், மிகப் பெரிய அளவில் மார்க்கெட் இருந்தது. சீனாவினைச் சேர்ந்த பிற நிறுவனங்களின் எழுச்சி மற்றும் விலையின் காரணமாக, சோனி எக்ஸ்ப்ரியாவின் மார்க்கெட் விழ ஆரம்பித்தது.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை, சுமார் 3,00,000 ஸ்மார்ட்போன்களே விற்பனையாகி உள்ளதாக, அந்த நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சுமார் 64% இதன் விற்பனைக் குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளக் காரணத்தினால், இதன் விற்பனை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
2019ம் ஆண்டு மட்டும் 32 லட்சம் எக்ஸ்ப்ரியா ரக ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளது. ஆனால், 2018ம் ஆண்டில் கிட்டத்தட்ட 65 லட்சம் எக்ஸ்ப்ரியா ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளன. இவைகளை ஒப்பிடும் பொழுதிலேயே, எக்ஸ்ப்ரியாவின் இறுதிக் காலம் நெருங்கி விட்டது உறுதியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு விற்பனையானது மிகவும் குறைந்துள்ளதால், கண்டிப்பாக அடுத்த ஆண்டுடன் அதன் விற்பனை முடிந்து விடும் என்றுக் கூறப்படுகின்றது.