சென்னை சவுக்கார் பேட்டையில் நடைபெற்ற மூன்று பேர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டக் குற்றவாளிகளை, ஒரே நாளில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை சவுக்கார் பேட்டையில் வசித்து வந்த திலீப் சந்த், புஷ்பா பாய் மற்றும் அவருடைய மகன் சீதாள் ஆகியோர் மர்மமான முறையில், அவர்களுடைய வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு மரணம் அடைந்து கிடந்தனர். அவர்களின் உடலினைக் கைப்பற்றியப் போலீசார், அந்த வீட்டில் இருந்த சிசிடிவிக் காட்சிகளை சோதனை செய்தனர். அதில் விவாகரத்திற்கு அப்ளை செய்துள்ள, சீதாள் ஜெயினின் மனைவியான ஜெயமாலாவின் சகோதரர் உட்பட மூன்று இதில் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையினை தமிழகக் காவல்துறை முடுக்கி விட்டது. அதன்படி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கைலாஷ் என்பவரையும், அவருடன் இருந்த விஜய் மற்றும் ராபின்தாக்கர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். புனேவினைச் சேர்ந்த கைலாஷ், அப்பகுதியில் ரவுடியாக இருந்துள்ளார்.
அங்கு தான் அவர் துப்பாக்கி உள்ளிட்டவைகளைப் பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளதாக, சென்னை துணை கமிஷனர் தெரிவித்து உள்ளார். பணத்திற்காகவே இந்த கொலை நடைபெற்று உள்ளதாக, சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.