ஸ்பெயின் நாட்டில் வருகின்ற மே-9ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்தார்.
உலகம் முழுவதும் பரவி இருக்கின்ற கொரோனா வைரஸ் காரணமாக, ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்டப் பல நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. அந்த நாட்டில், 2,15,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில், 89,250 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக 22,157 பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர்.
இதனை முன்னிட்டு, அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவினை நீட்டிப்பது குறித்து, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில், அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சஸ் பேசினார். அவர் பேசுகையில், கடந்த மார்ச் 14ம் தேதி அன்று ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டது. அப்பொழுது தொடங்கி, தற்பொழுது வரை இந்த ஊரடங்கானது அமலில் உள்ளது.
அந்நாட்டின் கீழ் அடுக்கு நாடாளுமன்றத்தில், இது குறித்து சுமார் 11 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, சிறு வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. அதன்படி, வருகின்ற மே-9ம் தேதி வரை, ஸ்பெயின் நாட்டில் ஊரடங்கு உத்தரவானது அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதில், ஒரு சில புதிய விதிவிலக்குகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதற்கானத் தடை தொடரும். வேலையில் அரசுப் பணிகளுக்காக செல்பவர்கள் செல்லலாம். அனுமதி வழங்கப்படுகின்றது. இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்படுகின்றது. சிகரெட் வாங்க நினைப்பவர்கள், வெளியில் சென்று வாங்கிக் கொள்ளலாம் என்பது உள்ளிட்ட சிறு விதிவிலக்குகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.